நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என அஞ்சத் தோன்றுகிறது: மு.க.ஸ்டாலின்

stalinகோவனின் கைதை பார்க்கும் போது நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் உள்ள “மக்கள் அதிகாரம்” என்ற அமைப்பு “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. அந்த ” மக்கள் அதிகாரம்” அமைப்பினர் ” மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு” எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீர் கைது செய்து செய்தனர். அவரை மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீசார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கூறாமல் மறுத்தும் அலைக்கழித்துள்ளனர். இறுதியில் இப்போது கோவனை தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு செய்தி சொல்லப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை நீக்கக் கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அதிமுக அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித் தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது. இப்போது கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவி விடுகிறது. அதிமுக படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

கோவனின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply