யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நியாயம் வழங்கக் கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

jaffna mussilmவடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்  வெள்ளிக்கிழமை நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்கு நியாயம் வழங்குவதற்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சரியான முறையில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

வடமாகாணத்தில் இருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், மதவாச்சி, அனுராதபுரம், புத்தளம், கொழும்பு என நாட்டின் பல இடங்களிலும் அவர்கள் சிதறிய நிலையில் வாழ்க்கை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

வடமாகாண மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிகவம் குறைவாகவே இருக்கின்றது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியிருக்கின்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில், முஸ்லிம்களின் விவகாரமும் நிச்சயம் உள்வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply