ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு கொழும்பு வருகை
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறி வதற்காக இருவர் கொண்ட உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு நேற்று மாலை கொழும்புக்கு வந்து சேர்ந்தது. இவர்கள் இன்று மாத்தறைக்குச் சென்று ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள தாக சுகாதார போசாக்கு அமைச்சு தெரிவித்தது.
ருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து ஒவ்வாமையினால் பாடசாலை மாணவி ஒருவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு குழுவொன்றை அனுப்புமாறு சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை கோரியிருந்தது.
அமைச்சின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன குழு நேற்று இலங்கை வந்ததோடு இந்தக் குழு இன்று காலை சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் மாத்தறைக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளது.
விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் வரை உலக சுகாதார ஸ்தாபன குழு இலங்கையில் தங்கியிருக்கும். இதேவேளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பனவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதனை தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
இதேவேளை ருபெல்லா தடுப்பூசி மருந்து ஒவ்வாமையினால் மேலும்27 மாணவிகள் நோய்வாய்ப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தற்பொழுது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களில் 7 மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப அச்சம் தெரிவித்து வருவதாக மாத்தறை பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் அருண ஜெயசேகர கூறினார். இதேவேளை மற்றொரு சிறுமி நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் (21) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இறந்த மாணவி பேசளா ஹன்சனி (13) யின் இறுதிக் கிரியைகள் நேற்று மாத்தறையில் நடைபெற்றன. அவர் கல்வி பயிலும் மாத்தறை சென். தோமஸ் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply