உங்கள் முடிவு என்ன என்பதை மக்களுக்கு கூறுங்கள்! ததேகூவிடம் சங்கரி கோரிக்கை

sangariசிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் இல்லை போர்க்குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டை அரசு முன்னெடுப்பதற்கு இடமளிக்காது அரசுக்கு நிபந்தனை விதித்து ஆதரவளியுங்கள், இந்த விடயம் மனிதாபிமான விடயமே அன்றி அரசியல் அல்ல என்பதை அரசுக்கு உணர்த்துங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விரைவில் விடுதலையாவோம் 15, 20 வருட கனவு நனவாகிறது என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் கூற்று பெரும் அதிர்ச்சியை தந்திருக்கும்.

கணவர் வரப்போகிறார் என்று மனைவியும், பிள்ளை வரப்போகிறான் என்று அம்மா அப்பா, அப்பா வரப்போகிறார் என்று பிள்ளைகள் என இவர்கள் ஒவ்வொரு வினாடியும் எண்ணிக் கொண்டு அந்த நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த உறவுகளுக்கு எத்தகைய உணர்வுகள் ஏற்படும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

அரசு மாறியது யாரால்? குற்றம் புரிந்தவர் யார்? இந்த நிலை உருவாகியது யாரால்? அவர்களுக்குத் தண்டனை இல்லை எனவும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட உள்ளது என்றால் விசாரணையாரிடம்? விடுதலைப் புலிகளிடமா? அதை வற்புறுத்தி கேட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?

உங்கள் முடிவுதான் என்ன என்பதை மக்களுக்கு கூறுங்கள். தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் அல்லது பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருங்கள். அல்லது வீதிக்கு இறங்குங்கள். இந்த அபலைகளுக்கு உதவுங்கள்.

சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் இல்லை போர்க்குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டை அரசு முன்னெடுப்பதற்கு இடமளிக்காது அரசுக்கு நிபந்தனை விதித்து ஆதரவளியுங்கள். இந்த விடயம் மனிதாபிமான விடயமே அன்றி அரசியல் அல்ல என்பதை அரசுக்கு உணர்த்துங்கள்.

நான் எவரையும் எதற்கும் தூண்டுவதில்லை. மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்துப்பார்த்தால் விளைவுகள் பாரதூரமானவையாக அமைந்துவிடும் என்றவொரு அச்சம் ஏற்படுகிறது.

இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியையோ அல்லது பிரதம மந்திரியையே சந்தித்துள்ளார்களா? பாராளுமன்ற ஆசனம் அலங்காரப் பொருளல்ல என்பதையும் அப்பாவிகளின் உயிர் வெறும் செல்லாக்காசாகவும் எண்ணாதீர்கள்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுங்கள். என, அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply