சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

air மேற்கு ஆசிய நாடான சிரியாவில் ஒருபுறம் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி 4-வது ஆண்டாக நீடித்து வருகிறது. இன்னொரு புறம் ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை கைப்பற்றிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிரியா அரசைப் பொறுத்தமட்டில், இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அதிபர் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகிற வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

 

கடந்த ஜூலை மாதம், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கப்போவதாக துருக்கி அறிவித்தது. அது முதற்கொண்டு, அமெரிக்காவுடன் துருக்கியும் கை கோர்த்தது. துருக்கியும் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. துருக்கியின் விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து வருகிறது.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இருந்து துருக்கியின் 6 போர் விமானங்கள் (எப்௧6 ரகம்) புறப்பட்டு சென்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன. ஏறத்தாழ 5 மணி நேரம் இந்த வான் தாக்குதல் நீடித்தது. இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றும் தாக்குதல் தொடுத்தது.

 

கிலிஸ் மாகாணத்தில், சிரிய எல்லையில் 5 கி.மீ. உள்ளே சென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

ஒரே நேரத்தில் துருக்கியும், அமெரிக்காவும் நடத்திய இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலை குலைந்து போயினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் பல அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சிரியாவில் துருக்கி போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply