முன்னாள் சவுதி மன்னரின் ‘இரகசிய மனைவிக்கு’ 23 மில்லியன் இழப்பீடு
சவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் ஃபாஹ்த் அவர்களை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் எனக் கூறும் பெண்ணுக்கு பெரிய அளவுக்கு இழப்பீடு வழங்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவருக்கான பல மில்லியன் டாலர்கள் இழப்பீட்டை மன்னரின் மகன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலஸ்தீனத்தில் பிறந்த ஜனான் ஹார்ப், கடந்த 1968ஆம் ஆண்டு அப்போது இளவரசரும் உள்துறை அமைச்சருமாக இருந்து பின்னர் மன்னரான ஃபாஹ்தை திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மன்னரது மகன் இளவரசர் அப்த்-அல்-அஜீஸ்-பின்-ஃபாஹ்த் தன்னை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதாக உறுதியளித்திருந்தார் எனவும் ஜனான் ஹார்ப் கூறுகிறார்.
ஆனால் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக வழங்கிய சாட்சியத்தில் இளவரசர் அவரது கூற்றை மறுத்துள்ளார்.
ஆனால் நீதிபதியோ, அந்த அம்மையர் கூறுவது நம்பும்படியாக உள்ளது எனவும் 68 வயதாகும் அவருக்கு 23 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சொகுசு வீடுகள்
இழப்பீடு மட்டுமன்றி அவருக்கு லண்டனில் இரண்டு சொகுசு அடுக்குமாடி வீடுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அடுத்த நான்கு வாரங்களுக்குள் இந்த இழப்பீட்டையும், வீட்டையும் சவுதி இளவரசர் வழங்கவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், மன்னரின் குடும்பத்தினர் தமது உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்றாலும், வெளியில் தெரியாமல் மன்னருடனான திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாவும் ஹார்ப் அம்மையார் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply