போர்க்குற்றங்களுக்கு மஹிந்தவும், கோத்தாவுமே பொறுப்பு! : பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் – குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடிச் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இறுதிப் போரின் இறுதி ஆறு நாட்கள் காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்த போதே சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்கப் போவதில்லைஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதாவது இரண்டு இலட்சம் பேரைக்கொண்ட பெரும் இராணுவப் படையணியில் 7,8 பேர் எதையேனும் இழைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்கமாட்டேன். அவர்களே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும். அது இராணுவத்தின் பிரச்சினையல்ல. நாம் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள முடியாது. யாரேனும் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டிருந்தால் நான் இராணுவத்தினருக்கு வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்.
நான் யுத்தத்தின் கடைசி ஆறு நாட்களும் வெளிநாட்டில் இருந்தேன். இதன்போதே வெள்ளைக் கொடி சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருப்பதை பகுங்கு குழி என்று கூறமுடியாது. மாறாக அதுவொரு நிலக் கீழ் மாளிகை. விடுதலைப் புலிகளின் சிறிய விமானத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நிலத்தின் கீழ் நான்கடுக்கு கட்டிடம் அவசியமில்லை. நான் இராணுவத் தலைமையகத்திலேயே இருந்தேன். அது ஜனாதிபதி மாளிகையில் இருந்து 200 மீற்றர் தொலைவிலேயே இருந்தது.
போர்க் காலத்தில் மூன்று அறைகளைக் கொண்ட கட்டிடத்திலேயே நான் இருந்தேன். நான் எனது படுக்கை அறைக்கு மேலாக ஒரு கொங்கீரிட்டை மாத்திரமே அமைத்துக் கொண்டேன். அதற்கு எனக்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவாகியிருந்தது. ஏனெனில், இராணுவத்தினர் என்ற படியால் 50 ஆயிரமே செலவாகியிருந்தது.
விடுதலைப் புலிகளின் அந்தக் குட்டி விமானங்கள் குறித்து பெரிதும் அச்சம் கொண்டவர்களாக மஹிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் இருந்திருப்பார்களேயானால் அதற்கான நான்கு அடுக்கு கட்டிடத்தை நிலத்தின் கீழ் கட்டியிருப்பார்களேயானால் அவர்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு அருகதையற்றவர்கள். மாறாக அவர்கள் முதற்தரக் கோழைகளாகவே நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply