அரசியல் கைதிகளின் விடுதலை தவிர்க்கப்பட முடியாததொன்று : வீ.ஆனந்தசங்கரி (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

sangariமேதகு ஜனாதிபதி அவர்களே,
அரசியல் கைதிகளின் விடுதலை தவிர்க்கப்பட முடியாததொன்று தாங்களும் தங்களுடைய பிரதம மந்திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனான பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவு நிலைமையை மேலும் மோசமடையச்செய்யும் என்பதை மிக வருத்தத்துடனும் அக்கறையுடனும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் இந்த விடயத்தில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் பிரச்சனையை எற்படுத்துகிறேன் என்றோ அல்லது தொந்தரவு தருகிறேன் என்றோ அல்லது தலையிடுகின்றேன் என்றோ தாங்கள் கருதகூடாது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென்று கேட்பது எனக்கு நியாயமாக தோன்றுகிறது.

முதலாவதாக சரியோ பிழையோ இந்த நாடும் குறிப்பாக தமிழ் மக்கள் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முற்றுமுழுதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தகைய பிரச்சாரத்தையே பாராளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தன. சிறைக்கைதிகள் விடயம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கும் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவானவுடன் தீர்வு கிடைக்குமென அப்போது அனைவரும் பொதுவாக அபிப்பிராயம் கொண்டிருந்தனர். துரதிஸ்டவசமாக கைதிகளின் பிரச்சனையும் வேறுசில பிரச்சனைகளும் தவிர ஏனைய சில பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. உடனுக்குடனும் வெற்றிகரமாகவும் பிரதம நீதியரசர், முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளீர்கள். ஆனால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படின் வேறுபட்ட கருத்துக்களும் தப்பான அபிப்பிராயங்களும் உருவாக வழிவகுக்கும். இந்த அரசாங்கத்தை எவரும் தவறாக நோக்குவதை நான் விரும்பவில்லை உங்களுக்கு மாறான பிரச்சாரங்களை சிலர் ஆரம்பிக்கக்கூடும்.
ஜனாதிபதி அவர்களே, இந்த வேண்டுகோள் கைதிகளின் உறவினர்களுடைய சார்பில் விடுக்கப்படுகின்றதே அன்றி கைதிகளின் சார்பாக அல்ல. இந்துக்களுக்கு தீபாவளி திருநாள் முக்கியமானதாகும் விசேடமாக மகிழ்ச்சியாக இருப்பதே இத் திருநாளின் விசேட அம்சமாகும். வீடுகளில் பெண்கள் பலகாரங்கள் செய்வதிலும், பிள்ளைகளுக்கு புத்தம் புது ஆடைகளை வாங்குவதிலும், வீடுகளை அலங்கரிப்பது போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவமளிப்பார்கள். தாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து தீபாவளி போன்ற நிகழ்வுகளை எவ்வாறு கொண்டாட வேண்டுமென்று இவர்கள் கனவு கண்டனர். அவர்களுடைய நோக்கம் நீண்டகாலத்தின் பின்பு தங்களிடம் வரும் பிரியமான உறவுகளை கோலாகலமாக வரவேற்று மகிழ்ச்சியடைவதே. தாங்கள் கடைசியாக எடுத்த தீர்மானம் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் மன அழுத்தத்தையும் கொடுத்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
சிலரை பகுதி பகுதியாகவும் ஏனையவர்களை நாட்குறிப்பிடபடாத தினத்திலும் விடுவிக்கப்படுவதாக எடுத்த தீர்மானத்தை திரு. சம்பந்தன் அவர்களும் அவரது குழுவினரும் மகிழ்ச்சியோடு வரவேற்றது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. பகுதி பகுதியாக விடுதலை செய்யப்படுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே இவர்களால் அறிந்துகொள்ள முடியாமல் போனது பரிதாபத்துக்குரியதாகும். இந்தக் கதையை பார்க்கும் போது சிங்கள கிராமங்களில் பிரசித்தி பெற்ற “கமரால” கிராம கதையே எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் வேடிக்கை என்னவெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுகின்ற இவ்விடயத்தை தாம் பெரிய சாதனை செய்ததாக இவர்கள் கருதுவது ஆச்சரியத்துக்குரியதாகும்.
ஜனாதிபதி அவர்களே, இந்த விடயத்தில் தாங்கள் அச்சப்படுவது சில எதிர்கட்சியினர் காட்டுகின்ற எதிர்ப்பு நடவடிக்கையாக இருப்பின் நான் அவர்களை சந்தித்து இந்த நடவடிக்கை நாட்டுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்றும் எந்த விதத்திலும் பாதகமாக அமையாது என்பதை அவர்களை நம்ப வைப்பேன்.
ஜனாதிபதி அவர்களே, 07ம் திகதி மீள ஒன்று சேர்வோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த கைதிகளின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் ஆகியோரின் உணர்வுகளை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் தாங்கள் தைரியமான ஒரு முடிவை எடுத்து அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து என்ன காரணத்தால் இவர்களை விடுதலை செய்தோம் என்பதை நாட்டுக்கு விளக்கி சகலரும் சம உரிமையுடன் வாழக்கூடிய இந்த நாட்டை தாங்கள் நீதியாகவும், நியாமாகவும் ஆள்வதற்கு பொருத்தமானவர் என்பதை உலகுக்கு நிருபித்து காட்டுங்கள்.
நன்றி

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ

07-11-2015 His Excellency M.S- Tamil

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply