தீய எண்ணங்களை ஒழித்து அறமெனும் ஒளியை ஏற்றுவோம் பிரதமர் : ரணில் விக்கிரமசிங்க

ranilநரகாசுரன் எனும் கொடியவனை தோற்கடித்து இருளகற்றிய இன்றைய தீபாவளி நாளில் உள்ளங்களை மனித நேயத்தைக் கொண்டு ஒளியேற்ற வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தீமை தோற்கடிக்கப்பட்டு நன்மை வெற்றி பெறுவதனை அடையாளப்படுத்தி உலகவாழ் இந்து பக்தர்கள் தீபங்களை ஏற்றி இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

 

இந்துக்களுக்கு தீங்கிழைத்த நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் தோற்கடித்த தினத்தையும் இளவரசன் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோதிக்கு வருகை தந்த தினத்தையும் விசேடமாக தீபாவளித் தினம் நினைவுபடுத்துகின்றது. இந்த அனைத்து தெய்வீகக் கதைகள், பழக்க வழக்கங்களிலிருந்தும் மனிதர்களிடம் காணப்படும் தீய எண்ணங்களை விட்டொழித்து நன்மையெனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதையே எமக்கு வலியுறுத்துகின்றது.

 

கடவுள் மீது கொண்ட தீராத பக்தியுடன் தீபாவளி தினத்தில் மேற்கொள்ளப்படும் சமயக் கிரியைகள் ஊடாக தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து நற்பயனை அடைந்துகொள்ள முடியுமென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதற்கமைய இது இந்துக்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியை எடுத்தியம்பும் சமயப் பண்டிகை என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.

 

இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன, மத பேதங்களை மறந்து சாதானமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு மனதில் உறுதி பூணுவதுடன் எமது உள்ளங்களை மனித நேயத்தினைக்கொண்டு ஒளியேற்றுவோம். அப்போதுதான் தீபாவளிப் பண்டிகை அர்த்தமிக்கதாக அமையும்.

 

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்லாசிகள்….!

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply