மியன்மார் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
மியன்மாரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி அமோக வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க் கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 70 வீத இடங்களை வெல்வதாக எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை 12 ஆசனங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளே அறிவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் எதிர்க்கட்சி வெற்றியீட்டியுள்ளது.
ஆங்சாங் சூயி நாம் வெற்றி பெறுவோம் என்று நேற்று அறிவித்திருந்தார். அனைவராலும் இந்த முடிவுகளை எதிர்பார்க்க முடியும் என்று பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே தாம் தோல்வியடைந்து விட்டோம் என்று ஆளும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சியின் தலைவர் ஹிட்யா ஊ குறிப்பிட்டுள்ளார். ஹிட்யா ஊவின் சொந்த தொகுதியிலேயே ஆளும் கட்சி தோல்வி அடைந்திருப்பதைக் கொண்டு முடிவுகளை ஊகிக்க முடியுமாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் உள்ளது.
எவ்வாறாயினும் அரசியலமைப்பின்படி மொத்தம் 664 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 25 வீதமான இடங்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே எதிர்க்கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானால் எஞ்சியுள்ள இடங்களில் அவர்கள் மூன்றில் இரண்டு பங்கை வென்றாக வேண்டும். மறுபுறம் ஆங்சாங் சூயி நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்பதையும் அரசியலமைப்பு தடுக்கிறது.
மியன்மார் அரசியலமைப்பில் வெளிநாட்டு சந்ததியை கொண்டவர்களுக்கு ஜனாதிபதி பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் குழந்தைகள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர் ஜனாதிபதி பதவியை வகிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இராணுவமே தொடர்ந்து நாட்டின் ஆதிக்க சக்தியாக இருப்பதை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. இராணுவத்திற்கு பிரதான அமைச்சு பதவிகள் உறுதி செய்யப்பட்டிருப்பதோடு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஆட்சியை கைப்பற்றும் அதிகாரம் இராணுவத்திற்கு உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தையும் இராணுவம் தொடர்ந்து தனது பிடியில் வைத்துள்ளது. 30 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்ற மியன்மார் தேர்தலில் 80 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றதோடு பெரிதாக அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்களது வாக்குரிமை மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தேர்தலின் நியாயத்தன்மை குறித்து கவலை வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அங்சாங் சூயின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றியீட்டிய போதும் அதனை இராணுவம் ரத்துச் செய்ததோடு ஆங்சாங்சூயி தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply