எவன்கார்ட் நிறுவனம் எந்த ஒரு அமைச்சருக்கும் பணம் வழங்கவில்லை
ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகள் காரணமாகவே எவன்கார்ட் ஆயுத கப்பல் செயற்பாடுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எவன்கார்ட் நிறுவனம் எந்த ஒரு அமைச்சருக்கும் பணம் வழங்கவில்லை என எவன்கார்ட் நிறுவன உத்தியோக த்தர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்தின் முடிவினால் 6500 ஊழியர்கள் தொழில் இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமது தரப்பு நியாயத்தை முன்வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ள அவர்கள், தவறினால் தமது பிரச்சினையை கடவுள் முன் சமர்ப்பிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டனர்.
எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பத்தரமுல்லயில் நடைபெற்றது. இதில் எவன்காரட் நிறுவன உயரதிகாரிகள் ஊழியர்கள் உட்பட 300 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சிலரது அரசியல் நோக்கம் காரணமாகவும் வேறு தரப்பினருக்கு இதனை வழங்கும் தேவைக்காகவுமே எவன்கார்ட் நிறுவனத்தையும் ஊழியர்களையும் மோசடிக்காரர்களாகவும் திருடர்களாகவும் காண்பிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர், 3 வருட காலத்தில் கடற்படை 1.55 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய போதும் எவன்கார்ட் பொறுப்பேற்ற 2 வருடகாலத்தில் இந்த வருமானம் 9.1 பில்லியனாக 6 மடங்கினால் உயர்ந்ததாகவும் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த எவன்கார்ட் நிறுவன தலைவரின் செயலாளர் கமல் கமகே குறிப்பிட்டதாவது,
தவறு செய்யாமலே இன்று எம்மை குற்றவாளிகளாக்கியுள்ளனர். எமக்கெதிராக எதுவித வழக்கும் தாக்கல் செய்யப்பட வில்லை. ஆனால் சிலர் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டு எம்மை குற்றவாளியாக்கியுள்ளனர்.
எவன்கார்ட் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 8 முதலே எம்மை பற்றிய தவறான அபிப்பிராயத்தினால் சர்ச்சை தலைதூக்கியது. கண்ணுக்குப் புலப்படாத பிசாசாக எவன்கார்ட் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 13 ஆம் திகதி முதல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப் பட்டிருந்த ‘மகநுவர’ கப்பலில் உள்ள ஆயுதங்களும் ரவைகளும் கடற்படையின ரால் பலாத்காரமாக அகற்றப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனே எவன்கார்ட் செயற்பட்டது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு எதுவுமின்றியே ஆயுதங்கள் பெறப்பட்டுள்ளன. தெற்கு கடற்படை தள பிரதி கட்டளையிடும் தளபதியின் கடிதத்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்டது. எமக்கு நியாயமான கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்ட போதும் அது வழங்கப்படவில்லை.
நாம் சட்டத்தை மதித்து ஆயுதங்களை மீள வழங்க தயாராக இருந்தோம். இந்த விவகாரம் குறித்து எமது பாவனையாளர்களுக்கு அறிவிக்கவும் எமக்கு கிடைக்க வேண்டிய 700 மில்லியன் ரூபா பணத்தை பெறவும் அவகாசம் கேட்டோம்.
2009 முதல் 2012 வரை மிதக்கும் ஆயுத கப்பல் சேவையை கடற்படை மேற்கொண்ட போது 1.55 பில்லியன் வருமானம் கிடைத்தது. 2012 முதல் 2014 டிசம்பர் வரை எவன்கார்ட் நிறுவனம் இதனை மேற்கொண்ட போது 9.1 பில்லியன் வருமானம் கிடைத்தது. இதில் 4.4 பில்லியன் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. கடற்படைக்கு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட சட்ட அங்கீகாரம் இருக்கிறதா என்பது சந்தேகமே.
எவன்கார்ட் வர்த்தக நடவடிக்கையினால் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கு உயர்ந்த சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு கிடைத்தது. அரசாங்கம் 5 சதம் கூட செலவிடாமல் பெருந்தொகை பணத்தை வருமானமாக பெற்றது.
நாம் தொழில் இழக்கப்போவதில்லை என கடற்படை தளபதி கூறியிருக்கிறார். எம்மை நடுரோட்டில் தள்ள வேண்டாம் என கடற்படையை கோருகிறோம்.
எமது பக்க நியாயம் வினவப்படாமலே எம்மை மோசடிக்காரர்களாகவும் திருடர்களாகவும் காண்பித்துள்ளனர். எமது தரப்பு நியாயங்களை முன்வைக்க அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரை கோருகிறோம்.
அதற்கு இடமளிக்காவிட் டால் எமது கவலையை கடவுளின் முன்பாக சமர்ப்பிக்க நேரிடும். எமது வியாபாரம் பலாத்காரமாக மீளப்பெறப் பட்டது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
ஓய்வுபெற்ற இராணுவ லெப்ரினன் கேர்ணல் நிலந்த ஜெயவீர கூறியதாவது,
நாடு முகங்கொடுத்த பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்ட எம்மை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் இன்று எம்மை மோசடிகாரர்களாக சித்தரிக்கின்றனர்.
ஓய்வின் பின் படையினருக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் 750 ரூபா சம்பளத்திற்கே தொழில் கிடைத்தது. ஓய்வின் பின்னர் சிறந்த எதிர்கால வாழ்வை வழங்கவே எவன்கார்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. கடற்படையினர் மிதக்கும் ஆயுத கப்பல் சேவை மேற்கொண்ட போது 158 ஆயுதங்கள் காணாமல் போயிருந்தன.
இதனால் இலங்கை கறுப்புப்பட்டியலில் இணைக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற படையினரை ஒவ்வொரு நாடுகளுக்கும் அனுப்பி அவற்றை தேடி எடுக்க எவன்கார்ட் நடவடிக்கை எடுத்தது.
எவன்கார்ட் நிறுவனம் உலகில் தலை சிறந்த மிதக்கும் ஆயுத கப்பல் சேவை என பிரித்தானியா பாராட்டியுள்ளதோடு பல சர்வதேச நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.
ஆனால் இன்று இதனை வேறு தரப்பினருக்கு வழங்குவதற்காக எம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளனர். நாம் தவறு செய்திருந்தால் முதலில் ரத்னா லங்கா நிறுவனத்திற்கே குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டும். நாட்டின் நலனுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எவன்கார்ட் நிறுவனம் தொடர்ந்து இருக்க வேண்டும். நாம் எந்த அமைச்சருக்கும் தேர்தலுக்காக பணம் வழங்கவில்லை என்றார்.
லெப்ரினன் நிலுபுல் த கொஸ்தா கூறியதாவது, எவன்கார்ட் கப்பலுக்கு பொறுப்பான அதிகாரியாக நான் செயற்பட்டேன். சர்வதேச கடற்பரப்பில் வைத்தே கடற்படை எம்மை கைது செய்தது. எம்மை கடற்படை படகுகள் சுற்றிவளைத்த போது எமது கப்பல் 15 கடல் மைல் பகுதியில் நங்கூரமிட்டி ருந்தது.
கப்பலில் இருந்த ஆயுத இலக்கங்கள் அழிக்கப்படவில்லை. அவை 20 வருடம் பழைமை வாய்ந்த ஆயுதங்களாகும். பகுப்பாய்வு விசாரணையில் இது தெளிவாகும். நியாயத்தை நிலைநாட்டு பவர்கள் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறித்து சிறிது நம்பிக்கை வைத்துள்ளேன்.
நான் முழுமையாக அங்கவீனமுற்ற படை வீரர் எமது கப்பல் கரைக்கு வருவது தெரியாது என கடற்படை தெரிவித்துள்ளது தவறாகும். ஜி.பி.எஸ். கருவியை நாம் அனைத்ததாக கூறும் குற்றச்சாட்டும் உண்மையில்லை. இவ்வளவு காலமும் கப்பலில் இருந்த ஆயுதங்களுக்கு கடற்படையே பாதுகாப்பு வழங்கியது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply