தலித்துகளின் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை
யுத்தம்: தலித் கேள்வி
யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பது மட்டும் முடிவாகத் தெரிகிறது.
சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள், இருக்கக்கூடும், இருக்கமுடியும். எல்லோருமே ஒருவகையில் நிரபராதிகள் எனவும் கூடும்.
யாரைத்தான் விட்டுவைத்தது இந்த யுத்தம்?
கொலையாளிகள் இருவர் தாம் செய்யப்போகும் கொலையை கடும்பிரயத்தனத்திலும் நிறுத்தமுடியாமல் போகும் நிலையைச் சொல்லும் லத்தீன் அமெரிக்க நாவல் கூறும் சூழ்நிலையை இலங்கைக்குப் பொருத்த முடியாவிடினும் மூன்று பத்தாண்டுகளாக கொலைகளை நிறுத்தவும முடியவில்லை.
கொலைகளுக் கெதிரான மறுப்பறிக்கைகளினதும் கண்டன அறிக்கைகளினதும் தேவையும் இப்போது இல்லை. சமுகத்தின் பொது அறம், தர்ம நியாயங்கள் பற்றிய கதை கூறுதலும் இப்போது இல்லை. அளவுகளும் இல்லை.
யுத்த தர்மம்! ஆம் யுத்த தர்மம் மட்டுமே நியாயமென்றாகி நீண்ட காலமாகிவிட்டது. சர்வதேசிய மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்புகள்கூட நவீன யுத்த தர்மத்தின் விழுமிய நியாயத்திலேயே கருத்துக்களையும் கண்டனங்களையும் ஆணித்தரமாகவும் பவ்வியமாகவும் வைக்கின்றன.
ஆதிகால யுத்த தர்மங்களைத் தற்போது நோக்குமிடத்து ஆச்சரியமளிக்கின்ற அதேவேளை ஆராதிக்கத் தகுந்ததாகவும் போற்றுதலுக்குரியதாகவும் ஆகிவிட்டது.
1) நேரடியாக தம் எதிரிக்குத் தூதரை அனுப்பி நிலைமையை தெரிந்து கொள்ளல்.
2) புலவோரை எதிரியிடம் அனுப்பி ஏற்படப்போகும் விபரீதங்களை அளவளாவுதல், உசாவுதல்
3) மீண்டும் மேலுமொரு விசேட தூதரை அனுப்பி நிலைமையை நிச்சயித்துக்கொள்ளல்
4) தன்படை, நேச படை, ஆதரவளிக்கும் அண்டைநாட்டு மன்னர் நிலை, இவற்றின் பலங்களையும் எதிரியின் பலம் பலவீனங்களையும் படைப்பலத்தையும் கணக்கிடுதல்.
5) வெற்றியை உறுதிப்படுத்தல்
6) தோல்வி நிச்சயம் எனில் சரண் அடைதல்,சமாதானமாகப்போதல்.
7) களபூமி என்றழைக்கப்படும் இருபடையினருக்கும் பொருத்தமான யுத்தப்பிரதேசத்தைத் தேர்ந்துகொள்ளல்.
8, குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர், துறவிகள், அறவோர், ‘அந்தணர்’, மாடுகள், வளங்கள், இவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
9) போருக்கான நாள் நேரம் இவற்றை பரஸ்பரம் அறிவித்து (றாந்தே- வூ கொடுத்து) ஏற்றுக்கொள்ளச் செய்தல்
10) எதிரியைக்கொண்டே போருக்கான நாள் குறித்தல்
11) அன்றைய நாளிற்கான யுத்தத் தொடக்கத்தையும் முடிவையும் பரஸ்பரம் அவற்றிற்கான சங்கை ஊதி பின் தம் முகாங்களுக்குத் திரும்புதல்.
இவற்றைப்பார்க்கும்போது போரிற்கென ஒரு தர்மம் இருந்தது தெரிகிறது. ஊதுவதற்குச் சங்கு இல்லையே தவிர தற்போதைய போரிலும் தர்மம் இருக்கத்தான் செய்கிறது.
மக்களைப் பாதுகாப்பான இடங்களிற்கு அப்புறப்படுத்திவிட்டு போரில் ஈடுபடும் இருதரப்பினரினதும் இழப்புகளை நிகழ்வுகளைக் கலிங்கத்துப் பரணியையும் விஞ்சும்வண்ணம் முழு ஈடுபாட்டோடு பார்த்து கேட்டு அபிநயித்து ஆதாரமாகக் கொண்டு உலகு தழுவி இந்த யுத்தத்தின் முடிவை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.
உற்பத்தி-பரிவர்த்தனை பொருளாதாரத்தை விஞ்சி யுத்தப் பொருளாதாரமும் யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கைமுறைமை, அதுசார்ந்த கலை, அழகியல், பண்பாடு, யுத்தம் தந்த புதிய மனிதர்கள், யுத்தமேற்படுத்திய நேச உறவுகள், எதிரிகள், புதிய வாழ் நிலங்கள் என இந்த யுத்தம் விட்டுச்செல்லும் விழுமியங்கள் மிகவும் காத்திரமானவை.
மிகப்பெரும் ஆளுமைகளை இந்த யுத்தம் தந்திருக்கிறதா இல்லையா?
‘நம்மிற் சிலர் இது வேண்டாம் நாம் பழைய நிலைக்கே போய்விடலாம்’ என்று இரண்டு பத்தாண்டுகளிற்குமேலாகவே கூறிவருகிறார்கள். குறிப்பாக கவிஞர் அருந்ததி 1986 இல் தனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு “சமாதானத்தின் பகைவர்கள்” என்றே பேரிட்டார். “துப்பாக்கிக் கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது” என்று ஆதிகால ‘தூண்டில்’ சஞ்சிகையில் தயபால திரணகம கட்டுரை எழுதியிருந்தார். போர் எதிர்ப்பு, சமாதானத்தைக் கோருதல் என்பது துரோகச் செயலாக நிறுவப்பட்டபோதிலும் அதைப் பெருமையாகவே ஏற்றுக்கொண்டு போர்நிறுத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி நாம் பழைய நிலைக்கே போய்விடலாம் என்று எப்போதும் போலவே சிலர் இப்போதும் சொல்லிவருகிறார்கள். தமிழ்த்தேசியவாதம் நம்மைக் கொண்டுவந்துவிட்டிருக்கும் நிலையைப்பார்த்தீர்களா? என்று சிவசேகரம் இப்போதும் கேட்கவே செய்கிறார்.
இந்த அழகிய நாட்டை ரயில் பாதைகளால் எப்படி அழகாக இணைக்கலாம் என அவரொத்தவர்கள் கனவுகாணுகிறார்கள். தோழர். டக்ளஸ் தேவானந்தா எல்லோரும் இணைந்தால் இன்னும் இரண்டு வருடத்திலேயே மீண்டும் சீரழிந்தவற்றைச் சீர்செய்துவிடலாம் என்கிறார்.
யுத்தம் முடிந்து புதிய இலங்கை பழைய இலங்கையின் நிலையை அடைய எடுக்கும் காலத்தில் உலகம் எப்படி மாறியிருக்கும் என்பதை 2025 ஆம் ஆண்டிற்கான மேற்குலகின் திட்டமிடல்கள் ஓரளவு காட்சிப்படுத்துகின்றன.
தலித்துகளாகிய நாம் யுத்தமுடிவின்பின் எவ்வாறு எதிர்கொள்ளப்படுவோம்?அதற்கான சிறந்த உதாரணத்தையும் எச்சரிக்கையையும் இறந்தகாலமும் நிகழ்காலமும் நமக்குச் சொல்கின்றன.
1986 இல் நடந்தது இது: தலித் சமூகத்தைச்சேர்ந்த இரு அரசாங்க நிருவாக உயர் அதிகாரிகள் அரசாங்க அதிபர்களாகிக்கொள்வதற்கு சேவை, திறமை, அனுபவம், நேர்மை போன்ற தகுதிகள் இருந்தும் அவர்களது சாதிகாரணமாக ஒருபோதுமே அப்பதவிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை. யாழ்.உதவித்தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவரை 1986 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்கு கொழும்பில் இருந்த சில சிங்கள உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். அன்றைய ஐ.தே.க. அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த அத்துலத்முதலி ‘அவ்வாறான அரசாங்க அதிபர் நியமனத்தை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்குவதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக்கொள்ளாது’ எனக்கூறி அச்சிபாரிசினை மறுத்துவிட்டார். அவ்வாறே யாழ். உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியான தாழ்த்தப்பட்டவர் மன்னார் அரசாங்க அதிபர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டபோதும் அவரது சாதி காரணமாக அந்நியமனம் கிடைக்கவில்லை. இதேபோன்று கல்வித்துறையின் உயர் நிர்வாகப் பதவிகளிலும் சாதியம் மிக நுணுக்கமாகப் பார்க்கப்பட்டது.
யுத்தமுடிவின் பின்னான மீள் நிர்மாணங்கள் சிவில் சமூக நிலைகள் எல்லாம் சீர்செய்யப்படும்போது சாதியம் எப்படிப் பரிமாணம் எடுக்குமென 2002 இன் சமாதான காலத்தில் நாம் அனுபவித்தோம்.
இந்த முப்பது வருட யுத்தச் சூழலிலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள், இலங்கை அரசு, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், சர்வதேச சமாதான இயக்கங்கள், கண்காணிப்புக் குழுக்கள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரிகள் என எல்லாவற்றிற்கும் யாழ் வெள்ளாள சமுகம் தண்ணிகாட்டிவிட்டு இன்னும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில் நமக்குத் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை.
– சுகன்
(சத்தியக் கடதாசி)
You can skip to the end and leave a response. Pinging is currently not allowed.
Leave a Reply