பெல்ஜியத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு தொடரும்: பிரதமர் சார்லஸ் மிக்கேல் அறிவிப்பு

poizei பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற மர்மக்கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் கார் பெல்ஜியம் நாட்டு பதிவு எண்ணை கொண்டிருந்தது. பெல்ஜியம் பிரான்சின் மிக நெருங்கிய அண்டை நாடு. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அந்நாட்டு போலிசார், சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தனர். மேலும் நாடுமுழுவதும் சோதனை முடுக்கிவிடப்பட்டது. 

 

அதோடு மட்டுமல்லாது, பாரிசில் நடத்தப்பட்டது போன்று பெல்ஜியத்திலும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், சலா அப்தேஸ்லாம் என்ற தேடப்படும் நபர் ஒருவர் மீண்டும் பெல்ஜியத்திற்கே வந்துவிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

 

இதனையடுத்து, பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸல்ஸ் நகருக்கு உடனடியான, மிகத் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த சனிக்கிழமை அந்நாடு கூறியது. மேலும் தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஷாப்பிங் மால்கள், இசைக் கச்சேரிகள் போன்ற அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் இந்த உச்சக்கட்ட பாதுகாப்பு மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடரும் என்று பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிக்கேல் தெரிவித்துள்ளார். நகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடர்ந்து மூடப்படும் என்றும் அவர் கூறினார். அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply