பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.
அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார். ஏறக்குறைய தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார் முஷாரப். எனினும், பதவி ஆசை அவரை விடவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் அங்கு தேர்தலில் நிற்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்தவுடன் முஷாரப் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 2013 முதல் தன்னுடைய விசாரணையை தொடங்கியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முஷாரப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு பல்வேறு காரணங்களால் இந்த வழக்கில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பர்வேஸ் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.ஐ.ஏ இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 17-க்குள் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கராச்சியில் தன்னுடைய மகளின் வீட்டில் தற்போது வசித்து வரும் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல நீதிமன்றம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால் முஷாரப்புக்கு மரணதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply