தமிழ் மக்களை புகலிடம் அற்றவர்களாக்க முயற்சி : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு

vikiஎமது பாரம்பரிய சமூகத்தைப் புகலிடம் அற்றவர்களாக்கவே பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலமும் நாங்களும் என்னும் கருப்பொருளிலான போருக்கு பின்னைய கால காணி பிரச்சினைகளை புரிந்து கொள்ளல் தொடர்பான கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு பாரம்பரிய சமூகத்தின் அடையாளமே அது வாழ்ந்து வரும் நிலந்தான். பாரம்பரிய நிலத்தில் இருந்து சமூகத்தைப் பிரித்தால் பிரிக்கப்பட்ட சமூகம் அநாதையாகிவிடும்.அதன் உறுப்பினர்கள் அகதிகளாகிவிடுவார்கள் அகதிகள் என்றால் புகலிடம் அற்றவர் என்று அர்த்தம். எமது பாரம்பரிய சமூகத்தைப் புகலிடம் அற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.போர் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுத்து வந்தவர்கள் போர் முடிந்ததென்று தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவில்லை.எமது பாரம்பரிய நிலங்களில் பாரிய பகுதியைப் படைகள் தம்வசம் பற்றிவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.அந்நிலங்களில் உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் நிராதரவாக, நிர்க்கதியினராக பிறர் நிலங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான இடர் வாழ்க்கையில் இருந்து வருகின்றார்கள்.

தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் துயருற்ற எமது அகதிகளுக்கு அண்மைக் காலமாகப் பலவித உறுதிமொழிகளை அளித்து வந்திருந்தாலும் அவர்களைத் தத்தமது பாரம்பரியக் காணிகளில் மீள்க்குடியமர்த்துவதில் சிக்கல்களும் தாமதங்களுமே மிஞ்சியுள்ளன.

இடம்பெயர்ந்த எம் மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்பதில் அதிகாரத்தில் உள்ளோருக்குப் போதிய கரிசனை இருக்கின்றதோ என்பதில் எமக்குச் சந்தேகமாக இருக்கின்றது.

காணிகளை விடுவிப்போம் என்றார்கள். அதில்த்தாமதம். அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இப்பொழுது விசேட நீதிமன்றம் அமைக்கப் போவதாகக் கூறுகின்றார்கள். ஆகவே எங்கள் சந்தேகங்கள் நியாயமானவை தான்.

காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாகக் கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே நான் அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரச குடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும்.

1983ம் ஆண்டின் இனக் கலவரத்தின் பின்னர் 1985ம் ஆண்டில் பிரித்தானிய பாராளுமன்ற மனித உரிமைகள் குழு தயாரித்த தனது அறிக்கையில் அது பின் வருமாறு கூறியது,அதாவது “ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழரின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியிருத்த முனைந்துள்ளது.” என்றார்கள்.

இதற்கான காரணங்களை அரசாங்கத்திடம் கேட்ட போது அவர்கள் அன்று அளித்த காரணம் “இலங்கை ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரே நாடு. வளங்களைத் தேடிச்சென்று இலங்கை வாழ் மக்கள் அவற்றைப் பகிர விடப்பட்டுள்ளார்கள்” என்பது. ஆனால் இது தவறு. அதாவது வளமுள்ள இடங்களுக்கு மக்கள் ஆற்றுப்படுத்தப்பட்டார்கள் என்று கூறியது தவறு. இந்நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே ஈரலிப்பான வளம் மிகுந்த இடங்களில் இருந்து வரண்ட வளம் குறைந்த இடங்களுக்கே பல்லாயிரம் மக்கள் குடியானவர்கள் குடியிருத்தல் திட்டங்களின் கீழ்க் குடியமர்த்தப்பட்டார்கள்.இவ்வாறான குடியேற்றத் திட்டங்களால் பாரம்பரியமாகத் தமிழ்ப்பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் அவர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டன.

தமிழ் இளைஞர்கள் வன்முறையில் இறங்கியதைக் காரணமாகக் காட்டி இவ்வாறான இன விரட்டல்க் காரியங்கள் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டன.அதாவது கிளர்ச்சிகளைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகக் காட்டி 1980ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு நிலையங்களை உருவாக்குவது பற்றியதான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

முதலில் பாதுகாப்பு நிலையம் அமைத்து அதன் பின் அதனைச் சுற்றிய இடங்களைப் பாதுகாப்பு வலையங்கள் ஆக்கி அதன்பின் அதியுச்சப் பாதுகாப்பு வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

பாதுகாப்பு நிலையங்ளைச் சுற்றிய பிரதேசங்களை அண்டிய பல சதுரகிலோ மீற்றர் காணிகள் பாரம்பரிய மக்களை அங்கு குடியிருக்க விடாமல் தடுத்து வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டன.

இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இருந்து ஆயிரம் மீற்றர் தூரத்திற்கு ஆட்கள் எவரும் இருக்கப்படாது என்று பிரகடனம் செய்ததால் பலாலி போன்ற இடங்களில் சுற்றுவட்டார மக்கள் யாவரும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது காலஞ்செல்லச் செல்ல பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது உள்நாட்டில் காணிகளுக்கு ஏற்பட்ட விபத்து. மக்களுக்கு ஏற்பட்ட விரட்டு.இதனால் கரையோரத் தமிழ்ப் பேசும் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, இந்தியா போன்ற நாடுகளில் தஞ்சம் புக வேண்டி வந்தது.

ஒரு முக்கிய உண்மையை சிங்கள அரசியல்வாதிகள் என்றென்றும் மறந்து விடுகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகாலம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் தான் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளனர்.

வேறெவரும் அங்கு அவ்வாறு பெரும்பான்மையினராக இருந்ததில்லை. இதைச் சிங்களத் தலைவர்கள் கூட 1919ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டிருந்தனர். இலங்கை நாடானது ஒற்றை நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயரால் 1833ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்னர் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக வட கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று இராச்சியங்களும் இருந்தன.அப்படியிருந்தும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை மதிக்காது மேற்படி தீர்மானமானது திரு.ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

அதன் காரணமாக யுத்தம் நீடிக்கத் தொடங்கியதும் அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதில் கண்ணாய் இருந்து வந்துள்ளார்கள். அதனைத் தமது இராணுவப் பாதுகாப்புச் சித்தாந்தத்தின் கொள்கையாகவும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்கள்.

அதியுச்ச பாதுகாப்பு வலயங்களானவை காணிகளைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் பொதுமக்களை அங்கிருந்து அகற்றி அவர்களின் வருகைக்குத் தடை விதிப்பதாகவும் அமைந்தது.இதனால்தான் எமது உள்நாட்டுக் குடி பெயர் மக்களின் அவலங்கள் தொடர்ந்திருந்து கொண்டு வருகின்றது. அதி உச்சப் பாதுகாப்பு வலையங்கள் என்று யுத்த காலத்தில் அடையாளம் காட்டப்பட்ட இடங்கள் இப்பொழுதும் அவ்வாறே குறிப்பிடப்படுவது பிழையென்று தெரிந்துதான் சில இடங்களை விசேட அபிவிருத்தி வலயங்கள் என்று பெயர் மாற்றித் தாமே அங்கு தொடர்ந்திருந்து வருகின்றார்கள் இராணுவத்தினர்.

முக்கியமாக அரசியல், இராணுவ, இனரீதியான சிந்தனைகள் காரணமாக பாரம்பரிய வாழ்விடங்களைத் தொலைத்துவிட்ட நிலையில் எமது மக்களுள் பலர் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களைத் தற்காலிகமாக வாழ இடமளித்த நிலங்களின் சொந்தக்காரர்கள் கூட எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளார்கள்.
காணியிருந்துங் காணியற்ற வாழ்வை அவற்றின் உரிமையாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

போர் முடிந்து ஏழாவது வருடம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், மீள் குடியிருப்பு வேண்டிப் பதியப்பட்ட இரண்டாயிரம் பேரின் வழக்குகள் இன்னும் தாமதமடைந்திருக்கும் இந்நிலையில்,எமது மக்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாக எவரோ ஒருவர் காணியில், வீட்டில், ஆதனத்தில் கவனிப்பார் அற்று காத்துக் கிடக்கும் இவ்வேளையில்,மேற்படி சர்வதேச கொள்கைக் கருத்தானது ஒரு ஒளிக்கீற்றை எம்மண்ணில் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

மக்களின் பரிதவிப்பை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் அவர்களின் மீள்குடியேறும் உரித்தை உணர்ந்துள்ளோமா என்றால் பெருவாரியாக இல்லையென்றே கூற வேண்டும். இவ்வுரித்தின் தாற்பரியம் ஜனாதிபதி முதல் சகல மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மிகத் திடமாகத் தெரியவர வேண்டும்.தெரியப்படுத்த வேண்டும். மக்களை அகதிகளாக்கி, தம் நாட்டிலேயே அன்னியர்களாக்கி வருடக்கணக்காக அவர்களை ஏதிலி வாழ்வு வாழ்விட சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நாங்கள் இன்று முன்வைப்போம்.

எங்கள் அரசாங்கங்களும் இராணுவத்தினரும் மக்களின் ஒரு முக்கியமான தனியுரித்தைப் பறித்து வைத்துப் பங்கம் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைகளைப் பாழ்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் கேட்டறியுமாறு இங்கிருந்து உரத்துக் கூறுவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply