ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான எண்ணெய் வியாபாரத்தை பாதுகாக்கவே எங்கள் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது: புதின் குற்றச்சாட்டு
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கும் கச்சா எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்பதற்காகவே தங்கள் நாட்டு போர்விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ரஷிய நாட்டுப் போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதியின் அருகே கடந்த வாரம் வழிமறித்து சுட்டு வீழ்த்தின.
துருக்கி நாட்டின் வான்வழி கட்டுப்பாட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி, ஐந்து நிமிடங்களில் பத்து முறை தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.
இந்த நிலையில், தங்கள் நாட்டின் சுகோய்௨4 ரக போர்விமானம் சிரியாவில் தாக்குதலுக்கு உள்ளானதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. அந்தப் போர்விமானம் துர்க்மெனிஸ்தான் மலைப்பகுதியில் விழுவதற்கு முன்னதாக அதில் இருந்த 2 பைலட்களும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர்.
அவர்களில் ஒருவரை சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது. பாராசூட் மூலம் கீழே குதித்த இன்னொரு விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அந்த விமானி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிரியாவில் உள்ள ரஷிய விமானப்படை தளத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டதாகவும், அவர் நல்லநிலையில் இருப்பதாகவும் ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு தெரிவித்தார்.
புரட்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட முதல் விமானிக்கு ரஷியாவின் மிக உயரிய விருதான ‘ரஷியாவின் கதாநாயகன்’ என்ற வீரதீர விருதும், தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது விமானி மற்றும் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மீட்புப் படையினருக்கு ரஷியாவின் உயரிய கவுரவ விருதுகளும் வழங்கப்படும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.
ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என சிரியாவை சுற்றிலும் தனது ராணுவ பலத்தை ரஷியா அதிகரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பாரிசில் பருவநிலை குறித்த உச்சிமாநாட்டின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தை பாதுகாக்கவே தங்கள் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிணறுகளை துப்பாக்கி முனையில் கைப்பற்றிக் கொள்ளும் ஐ.எஸ். திவிரவாதிகள், அங்கு காலகாலமாக தொழில் செய்துவரும் உரிமையாளர்களை அடித்து விரட்டியும், சுட்டுக் கொன்றும் அந்த பெட்ரோலிய கிணறுகளை அபகரித்துக் கொள்கின்றனர்.
முதலீடே இல்லாமல் இலவசமாக கிடைக்கும் கச்சா எண்ணெயை இதர எண்ணெய் நிறுவனங்களைவிட மிகக்குறைந்த அடிமாட்டு விலைக்கு விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து பெட்ரோலை வாங்க பலநாடுகள் போட்டிபோடுகின்றன. துருக்கியும் இதைப்போல் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சந்தை விலையில் பாதிக்கும் குறைவான பணத்தை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply