சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்: டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு

kanimoli அரசியலமைப்பு சாசனம் தொடர்பாக, நடந்த விவாதத்தில், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவரான கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது, சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருப்பவர்களும் கடவுளை வணங்குவதற்குரிய பூஜை முறைகளைக் கற்றுக் கொண்டு அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் என்று அதற்குப் பெயர். ஆனால், அந்தச் சட்டம் குறிப்பிட்ட சிலரால் பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையோ, வேற்று மதத்தினரையோ பூஜை செய்யச் சொல்லவில்லை.

 

இதே இந்து மதத்தைப் பின்பற்றும் மற்ற சாதியினரை கடவுளுக்கு பூஜை செய்ய அனுமதியுங்கள் என்றால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குக் காரணம், அவர்கள் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதுதான். இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.

 

எங்கள் செம்மொழியான தமிழ் மொழியை சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்க வேண்டும். இதற்காக, தமிழ்நாட்டில் வக்கீல்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக ஆக்கவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதையே அறிந்துகொள்ள இயலாத நிலை நீடிக்கும். எனவே, தமிழை சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

நம் நாடு பல்வேறு விதமான கலாச்சாரங்கள், கலைகள், மதங்கள், மொழிகள், உணவுப் பழக்கங்கள் என்று பன்முகத்தன்மை கொண்டது. இத்தனை வேற்றுமைகளிலும் ஒற்றுமையே நம் நாட்டின் தனிச் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவின் இந்த தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாடு. ஆனால், இப்போது இந்தியர்கள் அனைவரும் இந்தி என்ற ஒரு மொழியை நோக்கி வலுக்கட்டாயமாக நகர்த்தப்படுகிறோம்.

 

அண்மையில் நமது வெளியுறவுத்துறை மந்திரி, ‘இந்தியை ஐ.நா.வின் இந்தியாவுக்கான அலுவல் மொழியாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம்’ என்று கூறியிருக்கிறார். இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் போக்கு. இதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

 

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply