முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :-
‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடியாது. மாசுபடாத இயக்கமாக எமது கட்சி திகழ்கின்றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகத்தில் முக்கியஸ்தராக உள்ளார். அவர் நம்பிக்கைக்குரியவர். இதனால் கட்சியை ஏற்பதற்கு அவர் தயாரானால் இந்த நிமிடமே அதனை ஒப்படைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நல்லதொரு மனிதரை முதலமைச்சராக்கிவிட்டு அதனைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.
விக்கினேஸ்வரன் சம்மதித்தால் அவரை கட்சியின் தலைவராக நாளைக்கே நியமிப்பேன். அவர் பிரேரிக்கும் மற்றொருவரை செயலாளராக நியமிக்கவும் நான் தயாராக உள்ளேன். சம்பந்தனுடனோ, மாவையுடனோ நான் இணைவதற்கு தயாராக உள்ளேன்.
2004 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்தார். இதனால் நான்கு வருட பிரதமர் பதவியை ரணில் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு நடந்தும் ஒரு இலட்சியத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதேபோல் நானும் ஒன்றிணைவதற்கு தயாராகவே உள்ளேன். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்பதே எனது அவாவாகும்’ என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply