தேர்தல் வெற்றிக்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா விசாரணை நடத்தப்பட வேண்டும்
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக:கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 2005ம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்களின் ஆணையை மாற்றியமைப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
2005ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பிரதான கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 186000 வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டி, ஜனாதிபதியானார். யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் குறைந்த பட்சம் மூன்று லட்சம் வாக்குகள் புலிகளின் அழுத்தம் காரணமாக ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காக மஹிந்த தரப்பு 784 கோடி ரூபா பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபத்தி சூரியாரச்சி ஆகியோர், புலிகளின் சர்வதேசத் தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply