செந்தூரனின் சோக மரணம் நம் எல்லோருக்கும் முன்னெச்சரிக்கையே : வீ.ஆனந்தசங்கரி

sangariகொழும்பிலிருந்து வந்த கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கல்வி பொதுத் தராதரம் உயர்தர வகுப்பில் கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் துயரமான மரணசெய்தி உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்திலும் நாட்டிலும் பரவலாக அநேகர் இம் மாணவனின் சுற்றத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டனர். ஈமக் கிரியைகள் இடம்பெற்ற தினமான 27ம் திகதி மரியாதையின் நிமித்தமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு வசதியாகவும் குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தும் அன்று மூடப்பட்டன.

இந்த மாணவன் ஏன் இறந்தான்? தன்னுடைய உற்றார் உறவினர்களை முடிவில்லா துயரத்தில் பல ஆண்டுகள் வாழவிட்டதை தவிர இதனால் அவனுக்குக் கிடைத்த பலன் என்ன? அவனுடைய உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ சிறையில் இல்லை. இதுதான் என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது நாம் ஒரு புதிய கலாச்சாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோமா என்ற கேள்வியே என் உள்ளத்தில் எழுகிறது. இம் மரணச் சடங்கில் கலந்து கொண்டு ஆற்றிய அனுதாப உரையில் இந்த துயர சம்பவத்துக்கு நான் உட்பட அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தினேன். ஏனெனில் இத் துயரசம்பவம் தொடராது என்று கூறமுடியாது. சில பாராளுமன்ற உறுப்பினர்களுடைய உணர்ச்சிகரமான உணர்வுகளை தூண்டக்கூடிய உரைகள் இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்த இரண்டு மூன்று சம்பவங்களை போல இந்த தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுகின்றனர். சில அரசியல்வாதிகளும் சில கடும்போக்காளர்களும் ஆட்சேபிக்கின்றார்கள் என்பதற்காக நாடுதழுவிய அளவில் இனவேறுபாடு காட்டாமல் பெருந்தொகையான மக்களின் உணர்வுகளை அரசாங்கம் உதாசீனம் செய்யலாமா? பல நாடுகளில் இருந்தும் இத்தகைய வேண்டுகோள்கள் வருகின்றன. இதைவிட ஜே.வி.பி, புதிய ஜனநாயக கட்சியின் தலைவரும் யுத்தத்தை நடத்திய இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா, அத்துரலிய ரத்ன தேரர் பெரும் இழப்புக்களால் மிகவும் பாதிக்கப்பட்ட சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அம்மையார் போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுடன் கைதிகளின் விடுதலையையும் இணைப்பதற்கு என் மீது குற்றம் சுமத்தமாட்டார்கள் என நம்புகின்றேன். தாங்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற எண்ணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உலகளாவிய ரீதியில் பரப்பி வந்துள்ளது. தமிழ் மக்கள் உரிமை பற்றி பேசுகின்ற ஏகபோக உரிமையும் அவர்களுடையதல்ல என்பதை தெரிவித்து வந்துள்ளேன். தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த உரிமை உண்டு.
அத்தகைய தமிழர்களில் ஒருவனான நான் இன்றைய மோசமான நிலைமைக்கு முழு பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்க வேண்டும் எனக் கூறுகின்றேன். முதலாவதாக அவர்கள் விட்ட பெரும்தவறு தேசிய அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற ஆதரவுக்கு முக்கிய நிபந்தனையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையே முன்வைத்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரச்சனைகள் பற்றி தேசிய அரசாங்கத்தோடு பேசுவதற்காக அனைத்து தமிழ் குழுக்களையும் ஒற்றுமைபடுத்தி ஒரு பொது முன்னணி ஒன்றை அமைக்காதது அவர்கள் விட்ட இரண்டாவது பெரும் தவறாகும். இதே நிலைமையை தொடர்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிவாதமாக இருக்குமானால் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் குழுக்களும் இணைந்து ஓர் பொது அமைப்பை உருவாக்குவதைவிட வேறு வழியில்லை. இந்த அடிப்படையில் சிந்தித்து ஒரு பொது ஒற்றுமை முன்னணி அமைப்பதற்கு தங்களுடைய கதவை திறந்துவிட வேண்டும். அவர்கள் ஒன்றை உணர வேண்டும். தந்தை செல்வா 37 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தும் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்த இடத்திலேயே இருக்கின்றது 2004ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 12 ஆண்டுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை. ஆனால் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை மோசடி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டு தொடக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின்; மோசடிகளை தேசிய அரசாங்கம் அறியாது என எண்ணுவது இவர்களுடைய அறியாமையே. இந்த மோசடிகள் பற்றி உலக ரீதியாக எவரும் அறியாது இருக்க முடியாது. நியாயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படுமாக இருந்தால் தங்களுடைய மோசடிகளை இப்போதாவது ஒத்துக்கொண்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி மன்னிக்கவும், மறக்கவும் தயராக உள்ளது. இப்போதாவது தமது பலத்துக்காக தேசிய அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பியிருந்தமையை தவறென உணரும் என நினைக்கின்றேன். நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைகருதி இவர்களால் எத்தகைய தவறு இடம்பெற்றிருந்தாலும் அதனை பொருட்படுத்தாது தனது நிபந்தனையற்ற முழு ஆதரவை தமிழர் விடுதலைக் கூட்டணி தேசிய அரசாங்கத்துக்கு வழங்க தயாராக உள்ளது.
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply