சிரியா மீது வான் தாக்குதல்: இங்கிலாந்தின் முடிவுக்கு பாராட்டு: கேமரூனுடன் ஒபாமா தொலைபேசி மூலம் பேச்சு

Obama சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது இங்கிலாந்து வான்தாக்குதல் நடத்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பாராட்டு தெரிவித்தார். ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகுக்கே அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகின்றனர். ஈராக்கிலும், சிரியாவிலும் இந்த தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக அதன் படை பலம் குறைந்து வருகிறது. 

 

இதை ஈடுகட்டுவதற்கு அந்த இயக்கத்தினர், சிறுவர்களை படையில் சேர்த்து வருகின்றனர். இதுபற்றி அமெரிக்க ராணுவ மத்திய தலைவர் கர்னல் பேட் ரைடர் கூறுகையில், “ ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சிறுவர்களை சேர்ப்பது அதிகரித்து வருகிறது. 10 வயது சிறுவர்களைக்கூட சேர்த்து வருகின்றனர். பணயக்கைதிகளின் மரண தண்டனையை சிறுவர்களை கொண்டு நிறைவேற்றுகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த செயல், சட்ட விரோதமானது. போர்க்களத்தில் பலியாகிற தீவிரவாதிகளின் இழப்பை ஈடுகட்டுவதற்கு சிறுவர்களை படையில் சேர்த்துவருவது மறுபடியும் உறுதியாகி உள்ளது.” என்றார்.

 

இந்த நிலையில், ஈராக்கைப் போன்று சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது இங்கிலாந்து படைகள் வான்தாக்குதல் நடத்துவதற்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

 

ஈராக்கைப் போன்று சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான நமது கூட்டுப்படைகளில் இங்கிலாந்தும் சேர்வதற்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுத்திருப்பதை அதிபர் ஒபாமா பாராட்டி உள்ளார்.

 

இது தொடர்பாக ஒபாமாவும், கேமரூனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்கு அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்தும் விவாதித்தார்கள். அமெரிக்க கூட்டுப்படைகளில் சேர்வதற்கு அனைத்து நாடுகளையும் வரவேற்கிறோம்.

 

தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்தும் ஒபாமாவும், கேமரூனும் விவாதித்தார்கள். சான்பெர்னார்டினோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு கேமரூன் தன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

முன்னதாக, சிரியாவில் இங்கிலாந்து தனது வான்தாக்குதலை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply