பட்ஜெட் விவகாரம் பிளவுப்பட்டது கூட்டமைப்பு

tna2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), கூட்டமைப்பின் முடிவை மாறி, வரவு – செலவுத்திட்டத்தில் வாக்களிக்காதென அறிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில், அதற்கு ஆதரவளித்து வாக்களிப்பதற்குக் கூட்டமைப்புத் தீர்மானித்ததோடு, டெலோ உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவை வழங்கியிருந்தனர்.

எனினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தாலொழிய, மூன்றாவது வாசிப்பின் பின்னரான இறுதி வாக்கெடுப்பில், வரவு – செலவுத்திட்டத்துக்கு வாக்களிக்காதிருக்க, டெலோ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை இடம்பெற்ற டெலோவின் பொது அவையில், தமிழ் அரசியல் கைதிகள்  அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே, வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென, தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. ‘இல்லாதுவிடின், எமது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பர். ஏமாற்றுவதற்குப் பதிலாக அரசாங்கமானது, நேர்மையுடன் செயற்பட வேண்டும்’ என, அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். டெலோ தவிர, ஈ.பி.ஆர்.எல்.எப்-உம், இதே மாதிரியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அறியவருகிறது. டெலோ சார்பாக, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், கே. கோதீஸ்வரனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் காணப்படுகின்ற நிலையில், சிவசக்தி ஆனந்தன், சிவப்பிரகாசம் சிவமோகன் ஆகியோர், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுதலென்பது, கருத்திலெடுக்கப்படக்கூடிய ஒன்று தான் எனத் தெரிவித்ததோடு, இதுகுறித்த கவனம், நாடாளுமன்றத்தில் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply