ஐ.எஸ். இயக்கத்தை அமெரிக்கா அழிப்பது உறுதி : ஒபாமா
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா வேரோடு அழிக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2-ம் தேதி பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், ” கலிபோர்னியாவில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்குதலுக்கு கடல் கடந்த அல்லது உள்நாட்டு தீவிரவாத இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை.
ஆனால், கைது செய்யப்பட்ட இருவரும் இஸ்லாமியம் குறித்து தவறான புரிதல் கொண்டு அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் மீது போர் நடத்த மதத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று மட்டும் புலப்படுகிறது.
அவர்கள் இருவரும் இஸ்லாத்தைப்பற்றிய தவறான புரிதலால், இருண்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். பயங்கரவாதிகளின் இதுபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையேயான போராக மாற்ற முயற்சிக்க கூடாது. இதைத்தான் ஐ.எஸ். இயக்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதற்கு நாம் பலியாகக் கூடாது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரணத்தின் அடையாளமாக திகழ்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாமுக்கும் தொடர்பு இல்லை.
துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், பைப் குண்டுகள் ஆகியவற்றை ஏராளமாக சேமித்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்திலேயே அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆனால் இதை காரணம் காட்டி பிற மதத்தினரை ஒதுக்கி பாகுபாடோடு மக்கள் இருக்கக் கூடாது. இதற்கு நமது மக்கள் பலியாகி விடக்கூடாது. இத்தகைய பயங்கரவாதிகளை வேரோடு அழிப்பதில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்.
அதற்கு நமது முஸ்லிம் சமுதாய மக்களை வெறுத்து ஒதுக்காமல் தோழமையுடன் கூட்டாக வாழ்ந்து நமது வலிமையை அவர்களுக்கு காட்ட வேண்டும். அவர்களிடத்தில் மதசகிப்புத்தன்மையோடு வாழ்ந்து மனிதமானத்துடன் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக திகழும் ஐ.எஸ். மற்றும் அல் – காய்தா போன்றவைகளின் சித்தாந்தங்களை முற்றிலுமாக ஒதுக்க குரல் எழுப்ப வேண்டும். இதில் உலக முஸ்லிம் தலைவர்களும் உதவி புரிய வேண்டும்” என்று அமெரிக்க மக்களுக்காக ஆற்றிய உரையில் ஒபாமா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply