சீனத் தலைநகர் பீஜிங்கில் கடுமையான காற்று மாசு: கார்கள் ஓடத்தடை – மூச்சுத் திணறலால் மக்கள் அவதி

CHINAமக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் நாளுக்குநாள் சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குறிப்பாக, 2.2 கோடி மக்கள் வாழ்ந்துவரும் தலைநகர் பீஜிங்கில் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவருகின்றது. தற்போது அங்கு உறைபனி பெய்துவரும் நிலையில் காற்றில் கலக்கும் மாசுக்கள், வேகமாக பரவாமல் ஒரே இடத்தில் சூழ்ந்து உறைந்துள்ளது. போதாதகுறைக்கு குளிருக்கு கதகதப்பூட்டிக் கொள்ளும் வகையில் இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் நிலக்கரியை எரித்து மூட்டம் போடுவதால் அதிலிருந்தும் அதிகப்படியான புகை வெளியேறுகின்றது.

பீஜிங்கில் நேற்று 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு இன்று 365 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. 300 அலகுகளை தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பீஜிங் நகர காற்றில் உறைந்துள்ள மாசின் அளவு 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்கள் இயக்குவதை கைவிட்டு பஸ் உள்ளிட்ட பொது வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளுக்கு சொந்தமான 30 சதவீதம் கார்களும் ஓடவில்லை. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் பாதிக்கும் குறைவான கார்கள் மட்டுமே ஓடுவதை காண முடிந்தது. வரும் வியாழக்கிழமைவரை இந்த அதிகப்படியான காற்றுமாசு நீடிக்கும் என்பதால், இனி இரண்டு நாட்கள்வரை எட்டாயிரத்துக்கும் அதிகமான பேட்டரி பஸ்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களை மட்டும் இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply