ஆப்கான் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்: பலி 37 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆப்கான் ராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த ராணுவ முகாம்களில் இருந்து ஏராளமான ராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
காலை நிலவரப்படி இந்த தாக்குதல் மற்றும் சண்டையில் பயங்கரவாதிகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பிற்பகல் ஆப்கான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஊடுருவிய 11 பயங்கரவாதிகளில் 9 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், ஒருவன் காயமடைந்திருப்பதாகவும் மீதமுள்ள ஒருவன் மறைந்திருந்து ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply