அபிவிருத்திக் குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை நியமிக்கவும் :மனோ கணேசன்
நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சரும், நுவரெலிய மாவட்ட எம்பியுமான வி.எஸ். இராதாகிருஷ்ணனை நியமிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தின் ஐ.தே.க எம்பிக்கள் எவரையும் உள்வாங்கும் தேவை ஏற்படின், இணைத்தலைவர்களில் ஒருவராக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் நியமிக்கப்படலாம் என்பதையும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,
நுவரேலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசாரம் சுமார் 60 விகிதமாகும். இதற்கமையவே கடந்த பொதுதேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி இம்மாவட்டத்தில் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த அடிப்படை தரவுகள் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமனத்தின் போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி பொதுதேர்தலின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட ஏனைய கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுவரை வரலாற்றில் எந்த ஒரு தமிழ் வேட்பாளரும் பெற்றிருக்காத அதிகூடிய வாக்குகளையே நாம் பெற்றுள்ளோம். இந்நிலையில் கூட்டணியின் தலைவரான நானும், இணை பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகிக்கும் நிலையில், கூட்டணியின் இன்னொரு இணை பிரதி தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வி.எஸ். இராதாகிருஷ்ணன், நுவரேலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கப்படுவது அவசியமானது ஆகும்.
யாழ் மாவட்டத்தில் ஐ.தே.க பிரதி அமைச்சரும், ஸ்ரீலசுக எம்பியும், அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பியும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன். இந்த அடிப்படையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக இந்த கருத்தை முன்வைத்துள்ளேன். எமது இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிய தந்துள்ளேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply