யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிக்க 10 நிமிடத்தில் ஒரு கோடி 14 இலட்சம் குவிந்தது தே. சு. முன்னணியும் பங்களிப்பு
‘யாழ் தேவி’ ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் ‘வடக்கு நட்பு’ கருத்திட்டத்துக்கு 10 நிமிடத்தில் ஒரு கோடி 14 இலட்சம் ரூபா நிதி திரட்டப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். ஜனாதிபதி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி இதற்கான நிதியத்தை ஆரம்பித்து வைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பல தரப்பினரும் இதற்கு தமது பங்களிப்பை அளித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்க பணிகள் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதியினால் நிதியமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி தனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்ததோடு ஜனாதிபதி செயலக ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரினதும் மாகாண சபை உறுப்பினர்களி னதும் மே மாத சம்பளத்தை வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.
ரயில் நிலையமொன்றை புனரமைக்கவும் சில கிலோ மீட்டர் தூரம் வரையான ரயில் பாதையை சீரமைக்கவும் தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அலஹப் பெரும, 30 வருட யுத்தத்தின் பின்னர் வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இதற்கு சகலரும் கட்சி, இன, மத, பேதமின்றி தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
வடக்கிற்கான ரயில் சேவை 1956 ல் ஏப்ரல் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதே திகதியில் வவுனியாவில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்காவது யாழ் தேவி ரயில் சேவையை மீள் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், குறைந்தது 5 கிலோ மீட்டராவது யாழ் தேவி ரயில் சேவையை முன்னோக்கி மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply