இஸ்ரோவில் இருந்து 6 சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள்: 59 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது

ISREஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளத்தில் இருந்து வரும் நாளை மறுநாள் பிஎஸ்எல்வி விண்கலம் மூலம் ஏவப்பட உள்ள சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுக்கான 59 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி என்ற இருவகை ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமும், அதன் வணிகக் கிளையுமான ஆண்டிரிக்ஸ் நிறுவனமும் இணைந்து, வணிக ரீதியிலான வெளிநாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் போட்டுள்ளன.

அதன்படி சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் வரும் 16-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

சிங்கப்பூர் நாட்டில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சார்பில் வடிவமைக்கப்பட்ட டெலஸ்-1, வெலக்ஸ்-சி1, வெலக்ஸ்-2, அதனாக்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்கள் இதில் செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுக்கான ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக இறுதிகட்ட ஆயத்த பணிகளுக்கு 59 மணிநேர ‘‘கவுண்ட்டவுன்’’ தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணியளவில் இந்த கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைகோள்கள் பூமியின் தொலை உணர்வை அறிவதற்காகவும், சுற்றுப்புறம் மற்றும் பேரிடர்களைக் கண்காணிப்பதற்காகவும், தகவல் தொடர்பு போன்றவற்றுக்காகவும் அனுப்பப்படுகிறது. இவை பூமியில் இருந்து 550 கிலோ மீட்டரில் 15 டிகிரியில் தனித்தனியாக சுழன்று வந்து பூமியை படம் பிடித்து ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்க உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply