தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மனச்சாட்சியோடு பேச்சு நடத்த வேண்டும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மனச்சாட்சியோடு பேச்சு நடத்தினால் மாத்திரமே வடக்கில் மீள்குடியமர்த்துவதிலுள்ள பிரதான எதிரிகளை முறியடிக்க முடியுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாடுகளுடன் பேச்சு நடத்துவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்களை மாத்திரமே அங்கே குடியமர்த்தப்பட இருப்பதனால் த. தே. கூ.வினர் வட புல முஸ்லிம்களை துவேச பார்வை பார்க்காது அவர்களுடன் இணைந்து பேச முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
த. தே. கூ.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் வடக்கு மீள்குடியேற்றம் குறித்து தனித்தனியாக உயர் மட்டங்களுடன் பேச்சு நடத்துகின்றபோதும் இதுவரை தன்னுடன் இது குறித்து பேசாதது வேதனைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வரவு – செலவு திட்டத்தில் காணி, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சுகளுக்கான குழுநிலை விவாதம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
வடக்கிலிருந்து 04 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 03 இலட்சம் பேர் தமிழர்கள். எஞ்சிய ஒரு இலட்சம் பேர் முஸ்லிம்கள் ஆவர். தான் அமைச்சராக இருந்தபேது 03 இலட்சம் தமிழர்களை மீளக்குடியமர்த்துவதில் அதிக அக்கறை காட்டியிருந்தேன். ஆனால் இந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.
இவர்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தும் வகையில் திட்டம் வகுத்து செயற்பட வேண்டும். இதற்காக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் விசேட பிரிவு ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply