தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கி ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி

world bankதூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா என்ற நோக்கத்தை அடைவதற்கான இலக்கு 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சுத்தத்தை உறுதி செய்வது மற்றும் 4,041 நகர்ப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத நிலையை உறுதி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தபோது தெரிவித்தார்.

இதற்கான திட்டச் செலவு ரூ.66,009 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் மத்திய அரசின் பங்காக ரூ.14,643 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி அளித்துள்ள புள்ளிவிவர தகவலின் படி உலக அளவில் 240 கோடி மக்கள் சுகாதார வசதி இல்லாமல் உள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 75 கோடி பேர் சுகாதார வசதி இல்லாத நிலையில் வாழ்கின்றனர். குறிப்பாக அதிலும் 80 சதவீத மக்கள் இந்திய கிராமங்களில் வசிக்கின்றனர். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர்.

இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிர்வகிக்கப்படும் என்றும் உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் கழிப்பிட வசதியை உறுதி செய்யும் திட்டத்திற்கும் சுமார் 25 மில்லியன் டாலர் தொகையை உலக வங்கி நிதியுதவி வழங்க உள்ளது.

“இந்தியாவில் 10-ல் ஒருவரது மரணம் மோசமான சுகாதார சீர்கேட்டினால் நடக்கிறது. அதிலும் குறைந்த வருமானம் ஈட்டுவோர் சுகாதார சீர்கேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று உலக வங்கிக்கான இந்திய இயக்குநர் ஒன்னோ ரஹ்ல் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply