விசாரணை என்ற பெயரில் மக்களை குழப்ப முயற்சி : ரெலோ செல்வம் அடைக்கலநாதன்

selvamகாணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது காணாமற்போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.இந்த விடயத்தை தான் வண்மையாக கண்டிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமது உறவுகள் கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் சாட்சியமளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், காணாமல் போனவர்களுக்கான மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் வீட்டுத்திட்டம், சமுர்த்தி, கோழி வளர்ப்பு போன்ற உதவிகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காணாமற்போன, கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து அவர்களின் உறவினர்கள் உண்மையான நிலைப்பாடுகளை சாட்சியமளித்து வருகின்ற நிலையில், சாட்சியாளர்களை குழப்பும் வகையில் விசாரணை அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமற்போன, கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்களின் மீட்பு தொடர்பிலேயே உறவினர்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் மக்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கும், செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply