சரணடைந்தோர் விவகாரம்; இராணுவமே பொறுப்புகூற வேண்டும் : பரணகம ஆணைக்குழு

MARKSஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு இராணுவமே பொறுப்புக் கூற வேண்டுமென காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஐனாதிபதி ஆனைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழு தொடர்ச்சியாக இறுதி நாள் விசாரணைகளை நடத்தியது.

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணையொன்றின் போது ஆணைக்குழுவின் தலைவர் முன்பாக தயாயொருவர் தனது சாட்சியங்களை வழங்கினார்.

இதன் போது அவர் தன்னுடைய கணவரை தானே இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் அவரை அவர்கள் பேரூந்தில் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் இதனை தான் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்த பின்னர் இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் போயிருக்கின்ற உறவினர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம். அவர்களின் பிரச்சினைகளையும் விளங்கிக் கொள்கின்றோம். இங்கு கடத்தப்பட்டும் வன்னியில் சரணடைந்தும் காணாமல் போயிருக்கின்றவர்கள் தொடர்பில் இந்த ஆனைக்குழுவினூடாக முழுமையானதொரு விசாரணைகளை முன்னெடுப்போம்.

நீதிபதி தலைமையில் விசேட குழுவொன்றையும் நியமித்திருக்கின்றோம். அந்தக் குழுவினர் தொடர்ந்து இங்கு விசாரணைகளை முன்னெடுப்பார்கள். இதற்கு காணாமற்போனவர்களின் உறவினர்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் சரணடைந்தவர்கள் தொடர்பில் பலரும் தமது சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அவ்வாறு சரணடைந்தவர்களே தற்போது காணாமல் போயிருக்கின்றதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே சரணடைந்து காணாமல் போயிருந்தால் அதற்கு இராணுவம் தான் முழுப் பொறுப்பையும் கூற வேண்டும்.

குறிப்பாக சரணடைகின்ற போது அங்கு பொறுப்பாக இருந்தவர்கள் அவர்கள் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ன செய்கின்றனர் என்பது தொடர்பில் ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்ததென்பதனை கண்டறிய முடியும்.

இது மிக மிக கடினமானது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்போம். ஆனால் சில அதிகாரிகள் ஓய்வுபெற்றிருக்கின்றனர். இருந்தும் அவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுப்போம். எங்களால் இயன்றளவு நாங்கள் முழு விசாரணைகளையும் முன்னெடுத்து உங்களுக்கு நல்லதையே செய்வோம். என்ன நடந்ததென்ற உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply