போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களை ஆற்ற வேண்டும் : பிரதமர்
மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்லவென பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வெளியேறிச் செல்லும் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு நேற்று இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இராணுவ வீரா்கள் குறித்து பேசும் போது யுத்தத்தை இறுதி வரைக்கும் கொண்டு சென்ற பீல்ட் மாஷர் சரத் பொன்சேகாவையும் மறந்துவிட முடியாது. இந்த யுத்தத்தை வெற்றி கொண்டது இராணுவ வீரர்களாகும். அப்படியென்றால் அதற்கான சகல புகழையும் இராணுவத்தினருக்கே வழங்கவேண்டும். அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட கீர்த்தியை கட்டியெழுப்புவதற்காக இராணுவத்தை பயன்படுத்தக்கூடாது. இராணுவத்தினர் பயங்கரவாதத்தை முறியடித்ததை போன்றே தற்போது எங்களுக்கு சமாதானத்தை வெற்றிகொள்ள வேண்டியிருக்கின்றது.
அதேபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்கள், தென்பகுதிகளில் உயிரிழந்த மக்கள், இனவாதத்தினால் பிரிந்த மக்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டி இருக்கின்றது. அதற்காகவே ஜனவரி 8ம் திகதி மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். அதனை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
யுத்த மோதலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல கடந்த 2009ம் ஆண்டுவரை நாம் யுத்தம் செய்தது வேறு ஒரு அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக யுத்தம் புரிந்த பயங்கரவாதிகளுடனாகும். ஆனால் நாம் இப்போது முகம்கொடுக்க வேண்டியிருக்கும் உலகம் வித்தியாசமானதாகும். யுத்தம் செய்யம் முறைமையும் வித்தியாசமாகும்.
அந்த இடத்துக்கு நாம் செல்ல வேண்டும். அதற்காக யுத்த முறைமையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுடன் தொடா்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எமது இராணுவமும் வளர்ந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினருக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதோடு, இராணுவத்தை நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
அதற்காக சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதேபோல அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பராமரிக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply