கொழும்பில் இருந்து தீவிரவாதம் பற்றி பேசுபவர்கள் வடக்கிற்கு வந்து பாருங்கள் :ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வலி. வடக்கு மக்களை எதிர்வரும் ஆறு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். மக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நல்லிணக்கம் என்னும் தொனிப்பொருளில் அரச நந்தார் தின விழா நேற்று யாழ் மாநகர சபையின் திறந்த வெளியில், நடைபெற்றது. கிறிஸ்தவ மத விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கு பிரதம அதிதியாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களின் பிரச்சினைகளை எதிர்வரும் 6 மாதத்திற்குள் தீர்த்து வைப்பேன்.
இந்த பிரச்சினை மிக விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினை, மீள்குடியேற்றம் செய்வதற்கான செயலணி ஒன்றினை அமைக்கவுள்ளேன். அந்த செயலணியில் அரசியல்வாதிகள் மற்றும் முப்படையினர், பொது மக்களின் அமைப்புக்கள் என பலர் உள்வாங்கப்படவுள்ளனர்.
வெறுமன சத்தம் போடாமல் உண்மையில் பிரச்சினை என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்பு மோசமாகி விட்டது என்று சொல்லி தீவிரவாதிகள் அவசர அவசரமாக புதிய அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்த முயற்சி எடுக்கின்றார்கள்.
எமது சமாதான நடவடிக்கையின் மூலமாக சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்காக செயற்பட்டு வருகின்றோம் என்பதனை படித்தவர்களும் புத்தி ஜீவிகளும், பொது மக்களும் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்த நாட்டில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றோம். எனவே, ஊடகங்களில் எந்த செய்திகளையும் பிரசுரிப்பதற்கு இந்த நாட்டில் தற்போது சுதந்திரம் இருக்கின்றது.
அதேநேரம் பாராளுமன்றத்திலும் சுதந்திரமாக பேசுவதற்கு இந்த அரசாங்கம் இடமளித்துள்ளது.
அதனை தேசிய ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும். முதலில் இந்த நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமாக இருக்க வேண்டும்.
அதன்பிறகு இந்த நாட்டில், ஏழ்மையையும், வறுமையையும் இல்லாமல் ஒழிக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் யுத்தத்தினை உருவாக்கப் போகின்றோம் என்று குற்றஞ்சாட்டுகின்றார்கள். அத்துடன், மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
எமது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றது. இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தினை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம்.
இந்த நாட்டில் வாழக்கூடிய மக்கள் மிகவும் சந்தோஷமாக வாழ உயிர் தியாகத்துடன் செயற்படுவோம்.
இந்த நாட்டில் 26 வருடங்களாக மோசமான யுத்தம் நிலவியது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்தது. சமாதானம் ஏற்பட்டது. ஆனால், பிரச்சினை தீரவில்லை. யுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தினை தேடிப் பார்ப்பது மிகவும் அவசியம்.
யுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தினைக் கண்டு பிடித்து அதற்கான பரிகாரத்தினை செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு இல்லை என்று சொல்கின்றவர்கள். யுத்தம் ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
யுத்தம் முடிந்தது, சமாதானம் உருவாகியது. பிரச்சினை தீரவில்லை என்பதற்காகவே நான் இவ்வாறு கூறினேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பு மோசமாக போவதுடன், விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கு இடமளிப்பதாக கூறும் தீவிரவாதிகளை பார்த்து, வடபகுதிக்கு வந்து மக்களுடன் பேசிப்பார்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் இருந்து வடக்கிற்கு வர வேண்டுமானால், தேவையான எரிபொருளை வேண்டுமானாலும் கொடுக்கின்றேன்.
கொழும்பில் இருந்து வருவதற்கான வாகனங்களையும் கொடுக்க முடியும். கடல் மார்க்கமாக வர வேண்டுமானால் அவர்களுக்கு கப்பலையும் வழங்க தயாராக இருக்கின்றேன். இந்த இரண்டு வழிகளாலும் வர முடியாமல் போனால், விமான வசதிகளையும் பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை வந்திருக்கென்று சொன்னால், அரசாங்கத்தினால் வந்த பிரச்சினை அல்ல. இன்னும் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில் இந்த பிரச்சினை புதைந்து இருக்கின்றது.
அவர்கள் சமைக்கின்ற சமையறைக்கு சென்றேன். அவர்கள் சமைக்கின்ற சட்டி பானைகளை கூட என் கண்களால் கண்டேன்.
பாடசாலைகளில் படிக்கின்ற பிள்ளைகளிடம் எப்படி படிக்கின்றீர்கள் என்று கேட்டேன். பெற்றோர்களை பார்த்துக் கேட்டேன் எவ்வாறு நீங்கள் வாழ்கின்றீர்கள் என்று.
25 வருடங்களாக வாழ்ந்த எமது இடங்களில் எங்களை கொண்டு போய் விடுங்கள் என கேட்டார்கள். கொழும்பில் இருந்து சத்தம் போடும் அந்த தீவிரவாதிகளை பார்த்துக் கேட்கின்றேன். இந்த மக்களை வந்து பாருங்கள். பார்த்துப் பேசுங்கள். வெறுமனவே, கொழும்பில் இருந்து தீவிரவாதத்தினைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.
இந்த நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றிணைந்து தான், ஆட்சியை நடாத்துகின்றார்கள்.
எனவே, வடமாகாணத்தில் இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தினை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.
அந்த தீவிரவாதிகளுக்கு அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.
மக்களின் வாக்குகளை தவிர வேறு எந்த சதி திட்டத்தின் ஊடாகவும் அரசை அமைக்க இடமளிக்கமாட்டோம் என்று அந்த தீவிரவாதிகளுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் ஏழ்மை வறுமை இல்லாது ஒழிக்க அனைவரும் ஒன்றுபடுங்கள். இந்த நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றுபடுங்கள். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்காதவர்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், யாழ் மறை மாவட்ட ஆயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply