மகளிர் போலீஸ் நிலையத்திலேயே பெண் குத்திக்கொலை
தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 26). இவரது மனைவி கவுரி (23). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாம்பரம்நகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் கவுரிக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கணபதி தட்டிக்கேட்டார். இதன் காரணமாக
இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணபதி மது குடித்துவிட்டு போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி
வந்ததாக தெரிகிறது.
இதை தாங்க முடியாத கவுரி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக நேற்று மதியம் தாம்பரம் மகளிர்
போலீஸ் நிலையம் வந்த கவுரி, தனது கணவர் கணபதி தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து உதைப்பதாகவும், அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் செய்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் கணபதியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். நேற்று மதியம் 3 மணிக்கு கணபதி
மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீசார் வெளியே காத்திருக்கும்படி கூறினர். கணபதி வெளியே வந்தபோது, கவுரி
போலீஸ் நிலைய வளாகத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
என் மீது போலீசில் புகார் செய்கிறாயா? என்று கணபதி மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம்
முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கணபதி, மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து சரமாரியாக கவுரியின் மார்பில்
குத்தினார். சத்தம் கேட்டு அங்கு வந்த பெண் போலீசார் முன்னிலையிலேயே இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
இதில் நிலைகுலைந்த கவுரி அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே தப்பி ஓட முயன்ற கணபதியை மகளிர் போலீசார்
பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கவுரியை போலீசார் சிகிச்சைக்காக குரோம்பேட்டை
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த கொலை தொடர்பாக தாம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தில் மகளிர் போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply