போர்ட் சிற்றி விவகாரத்தில் சூழல் பாதுகாப்பிற்கே முதலிடம் : ஜனாதிபதி
போர்ட் சிற்றி என்ற கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான தீர்மானங்கள் சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது போர்ட் சிற்றி விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதோடு, இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சூழலியலாளர்களுக்கும் நாட்டின் எந்தவொரு நபருக்கும் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் மேற்கொள்ளப்படும் சுற்றாடல் அழிப்பு தொடர்பாக உடனடியாக அறிவிக்க முடியுமான குழுவொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நியமிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், சுற்றாடல் அமைச்சு, வனசீவராசிகள் அமைச்சு மற்றும் இராணுவப்படை ஆகியவற்றை உள்ளடக்கியதான குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த காடழிப்பு நடவடிக்கை ஜனாதிபதியின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டபோதும், மீண்டும் அடிக்கடி ஆரம்பிக்கப்படும் காடழிப்புப்பற்றி சூழலியலாளர்கள் இங்கு ஜனாதிபதிக்கு விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், வடமேல் மாகாண சுற்றாடல் நியதிச்சட்டம் காரணமாக வடமேல் மாகாணத்தில் இடம்பெறும் ஒரு சில சூழல் அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இயலாமல் உள்ளதாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
துறைமுக நகர திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும்போது அனைத்து ஆய்வு அறிக்கைகளும் ஆழமாக கருத்திற்கொள்ளப்படும் என ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாபதியின் செயலாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர்அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் சூழலியலாளர்கள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply