பிரான்ஸ் படைகள் அதிரடி தாக்குதல்: மாலி நாட்டில் 10 ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து அரசுக்கு ஆதரவாக அங்கு பிரான்ஸ் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தலைநகர் பமாகோவில் உள்ள ரேடிசன் புளூ என்னும் சொகுசு ஓட்டலில் கடந்த மாதம் 20-ந்தேதி அல் மொராபிதுன் என்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் ரஷியர்கள் ஆவர். 3 பேர் சீனர்கள். தவிர, அமெரிக்கா, பெல்ஜியம், செனகல் மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் பலியாயினர்.
இந்த தாக்குதலுக்கு மாலி நாட்டில் செயல்படும் அல் மொராபிதுன் மற்றும் அல்கொய்தா ஆதரவு இயக்கமான மாக்ரெப் ஆகியவை பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன. இதேபோல் மசினா விடுதலை முன்னணி என்ற இயக்கமும் பொறுப்பு ஏற்பதாக அறிவித்து இருந்தது.
இதையடுத்து மாலியில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதில் பிரான்ஸ் படைகள் தீவிரமாக இறங்கின. கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் தொடங்கி 20-ந்தேதி அதிகாலை வரை அல் மொராபிதுன் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த மெனகா என்னும் பகுதியில் பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் அல் மொராபிதுன் இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது, சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 டிரக் வண்டிகள், வெடிமருந்து பொருட்களையும் பிரான்ஸ் படைகள் கைப்பற்றின.
இந்த தகவலை பிரான்ஸ் ராணுவ அமைச்சகமும் உறுதி செய்து அறிக்கையாக வெளியிட்டது. எனினும் இந்த நடவடிக்கை பற்றிய முழு விவரம் வெளியிடப்படவில்லை.
.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply