16 இலட்சம் தமிழர் நலனில் கூடிய கரிசனை : மனோ கணேசன்

manoபுதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புணர்வுடன்  செயற்பட்டு வருவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் தூரநோக்கற்ற அரசியல் அக்கறையீனம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேளைகளில் மலையக தமிழ் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட புதிய வரலாற்றை ஏற்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு தொகுதி மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களைத் தமது இல்லத்தில் சந்தித்த அமைச்சர், புதிய அரசியலைமைப்பு தொடர்பில் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முழு பாராளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

 

வடக்கு ,-கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் இணைந்து உத்தேச அரசியலமைப்பில் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் எமது மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கும் பணிகளை அமைதியாகவும், காத்திரமாகவும் செய்து வருகிறோம். இதற்கான ஆரம்ப கட்ட பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட குழுக்களில் தற்சமயம் நாம் நியமித்துள்ளோம்.

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அமைச்சரவை அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால், எதிர்கால பாராளுமன்ற தேர்தல்முறை தொடர்பில் ஆராய்ந்து உரிய ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் நோக்கில், “தேர்தல்முறைமை குழு” நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவுக்கு சமூக செயற்பாட்டாளர் திரு. பி. முத்துலிங்கம் என்பவர் எம்மால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நாடு முழுக்க பயணித்து பொதுமக்களிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து, புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகளை உள்வாங்கி அவற்றை ஆராய்ந்து எமது அமைச்சரவை உபகுழுவுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில், “பொது பிரதிநிதித்துவ குழு” நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ். விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதேவேளை தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் போது, நமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் முகமாக புதிய உள்ளூராட்சி வட்டார எல்லைகளை வகுத்து அவற்றை உள்ளூராட்சி வட்டார மீள்நிர்ணய குழுவுக்கு சம்பிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

 

இது தொடர்பில் நமது கூட்டணியின் நிபுணர் குழு, கண்டி, நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்துறை, கேகாலை, மாத்தளை, கம்பஹா, புத்தளம், மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளை உள்வாங்கி பணிகளை முன்னெடுக்கும்.

 

தற்போது கண்டி, நுரெலியா, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்ட பணிகளை முடிவுக்குகொண்டு வந்துள்ள இக்குழு ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பயணிக்க உள்ளது.

 

இந்த நிபுணர் குழுவில், பி. முத்துலிங்கம், எஸ். விஜய சந்திரன், ஆர். ரமேஷ், வி. நந்தகுமார் ஆகியோெர் நியமிக்கப்பட்டுள்ளனர் .

 

அதேவேளை, மலையக தமிழ் மக்கள் உள்ளடங்கலான வடக்கு கிழக்குக்கு வெளியே ஏழு மாகாணங்களில் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை தொகுத்து அவற்றை உத்தேச புதிய அரசியலமைப்பில் உள்வாங்கச்செய்யும் முகமாக, ஒரு நிபுணர் குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

 

ஜனவரி முதல் வாரமுடிவில் நடைபெற உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடுத்த செயற்குழு கூட்டத்தின்போது இந்த குழு அறிவிக்கப்படும். அதேவேளை உத்தேச புதிய அரசியலமைப்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படுவது தொடர்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

 

இது நடைபெறும் வேளையில், இந்திய வம்சாவளி மக்களின் தேவைப்பாடுகள் குறித்தும், எமது கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் என்னிடம் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்கும் நல்ல ஒரு கருத்து இதுவாகும். இதை நாம் வரவேற்கிறோம்.

 

அதேவேளை முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படும் முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். இன்னொரு போராட்டம், இன்னொரு யுத்தம் ஆகியவற்றுக்காக்க இனி நாம் காத்திருக்க முடியாது. இப்போது உருவாகியுள்ள புதிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாம் எமது பிரச்சினைகளுக்கு ஒரேயடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply