வர்ணசிங்கவின் அமைச்சு முதலமைச்சர் வசமானது
ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சருமான நிஷாந்த வர்ணசிங்கவின் அமைச்சு, மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சபையின், 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், நிஷாந்த வர்ணசிங்கவின் அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீடுகள் தோல்வியடைந்ததையடுத்தே, அவ்வமைச்சு, முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையை மேல் மாகாண ஆளுநர் எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. அதனடிப்படையில், மேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சமூக நலனோம்பல், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனக்கு அறிவிக்கவில்லை மேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சமூக நலனோம்பல், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சு, மேல் மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படுவது தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லை என்று, மேல் மாகாண சபையின் அமைச்சர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
மாகாண சபையின் எந்தவோர் அமைச்சையும் தனக்குக் கீழ் கொண்டுவருவதற்கும், அவ்வமைச்சை வேறொருவரிடம் ஒப்படைப்பதற்குமான அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார். அவசரமாக நாளை கூடுகிறது அவை மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அச்சபை, நாளை வியாழக்கிழமை கூடவிருக்கின்றது. சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தவிர, மேல் மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அச்சபையின் அமர்வு, ஜனவரி 05 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களின் பிரகாரமே, அச்சபை, வியாழக்கிழமை கூடவிருப்பதாகவும் அறியமுடிகின்றது. சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் நிறைவேற்றாமை சட்டரீதியான பிரச்சினை என்பதனால் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, அவையை அவசரமாகக் கூட்டுவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்தார் என்றும் அறியமுடிகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply