பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது

jeyalalithaபரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் திருவான்மியூரில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் கூட்டி வருவது வழக்கம்.

 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கட்சிகளின் சார்பில் நடைபெறும் செயற்குழு-பொதுக்குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. கூட்டணி குறித்தும், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கட்சிகள் இந்த செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுப்பார்கள்.

 

தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய செயற்குழு-பொதுக்குழுவை இன்று (வியாழக்கிழமை) கூட்டியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியின் செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தேர்தல் வியூகத்தின்படி அக்கட்சி தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

 

அந்த வகையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பதால் அ.தி.மு.க.வினர் மிகுந்த ஆர்வத்துடன் இந்த கூட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன்நகர் ராமசந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சீர் செய்யப்பட்டு, இரு பக்கத்திலும் அ.தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு வருகிறது.

 

கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் வழியெங்கும் டிஜிட்டல் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

 

செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. காலை 10.30 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

 

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை போலவே தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா? என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய வியூகம் அமைக்கப்படுகிறது.

 

ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் புதிய மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வார்டு வாரியாக நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த கூட்டத்தை தொடர்ந்து, தை பொங்கலுக்கு பிறகு அ.தி.மு.க.வின் தேர்தல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது.

 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து மனுக்கள் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் தை பொங்கலுக்கு பிறகு நடைபெறலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply