விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு, பேரறிவாளன் கருணை மனு
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் ஏ.ஜி.பேரறிவாளன் (வயது 44). இவர், தமிழக கவர்னர் ரோசைய்யாவுக்கு கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், என் பெற்றோரிடம் வந்து, கொலை தொடர்பான ஒரு தகவலை உங்கள் மகனிடம் இருந்து பெறவேண்டும் என்று 11–6–1991 அன்று கூறினார். அதை நம்பி என்னை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் என் பெற்றோர் அன்று ஒப்படைத்தனர். அன்று பத்திரிகைகளில் முக்கிய குற்றவாளியை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்து கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது. 19 வயதில் அன்றுதான் நான் வெளியுலகத்தை பார்த்த கடைசி நாள். அதன்பின்னர் நான் சிறையிலேயே அடைக்கப்பட்டு வருகிறேன். என் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு சிறப்பு தடா கோர்ட்டு தூக்குத் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. தடா சட்டத்தின் கீழ் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் போலீஸ் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.
அதாவது 1991–ம் ஆண்டு மே முதல் வாரத்தில், ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு நான் 9 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகளை வழங்கியதாகத்தான் என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இதையடுத்து தமிழக கவர்னரிடம் கருணை மனு கொடுத்தேன். ஆனால், அந்த மனு மாநில அமைச்சரவையின் அறிவுரைகளை பெறாமலேயே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஐகோர்ட்டும், மாநில அமைச்சரவையின் அறிவுரையின் படி மீண்டும் என் கருணை மனுவை பரிசீலிக்க கவர்னருக்கு உத்தரவிட்டது. ஆனால் மீண்டும் என் கருணை மனுவை கவர்னர் நிராகரித்தார். இதையடுத்து கடந்த 2000–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந்தேதி ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பினேன்.
இந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல் மத்திய அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில், கடந்த 2011–ம் ஆண்டு என் மனுவை நிராகரித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். அதுவும் நான் மனு கொடுத்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 16 ஆண்டுகளாக எப்போது வேண்டுமானாலும் தூக்கில் போடப்படலாம் என்ற மன வேதனையுடன் சிறையில் வாழ்ந்து வந்தேன். ஜனாதிபதி என் மனுவை நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதேபோல, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நான் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.
இது தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு எங்களுக்கு தண்டனை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர் என்பதை பிரதிபலிக்கும் முடிவாகும். இதற்கிடையில் ஐகோர்ட்டில் இருந்த என் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எனக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி 18–ந்தேதி தீர்ப்பளித்தது.
தண்டனை கைதியாக நான் உட்பட 7 பேர் சிறையில் படும் வேதனையை புரிந்துக் கொண்டு, பாசத்துக்குரிய தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா எங்களை உடனடியாக விடுதலை செய்ய சட்டசபையில் 19–2–2014 அன்று தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டை நாடியது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த வழக்கில் 21–2–2015 அன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், எங்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
அதேநேரம், மாநில அமைச் சரவையின் அறிவுரையின்படி, எனக்கு கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் அதிகாரத்தை தமிழக கவர்னராக தங்களுக்கு உள்ளது என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு அரசியலமைப்பு அமர்வு உறுதி செய்துள்ளது.
19 வயதில் சிறைக்கு வந்த நான் கடந்த 24 ஆண்டுகளாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிவராசனுக்கு நான் பேட்டரிகள் வாங்கிக் கொடுத்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையின்போது, வயர்லெஸ் பேச்சை ஆதாரமாக கொண்டு, 1991–ம் ஆண்டு மே 7–ந் தேதி வரை சிவராசன், தனு, சுபா ஆகியோருக்கு ராஜீவ்காந்தியை கொலை செய்ய போகிறோம் என்பது தெரியாது என்பதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது அந்த மே மாதம் முதல் வாரத்தில் ராஜீவ்காந்தியை கொலை செய்ய நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்பது குற்றம் சுமத்துவது தவறானது ஆகும்.
நான் இத்தனை ஆண்டுகளாக சிறையில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன். கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன் உள்ளிட்ட 10 பட்டங்களை சிறையில் இருந்த படியே பெற்றுள்ளேன். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து, என் மீது கருணை காட்டி, என்னை சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், எனக்கும் என் குடும்பத்தாரும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு ஏற்படும். என்னுடைய கருணை மனுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply