மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை மாநகரிலேயே வசிப்பிடங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை மாநகரிலேயே வசிப்பிடங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு வீடுகளை ஒப்படைக்கும் ஆணையை நேரில் வழங்கியும், 10
ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
2005-ம் ஆண்டு ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’’ மூலம் ஒக்கியம் துரைப்பாக்கம்,
பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது
அதில் இருந்து தான் 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற காரணத்தினாலும், தங்களுடைய தொழிலுக்காக
சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தினந்தோறும் சென்றுவர வேண்டும் என்றும், அதனால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும், தங்கள்
வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்று கூறி அந்த வீடுகளில் யாரும் குடியேற மறுத்து தற்போது வரை காலியாகவே இருந்து வந்தது.
மேலும் தற்போது பெய்த கனமழையால் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்
கடுமையாக பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கிறோம் என்கின்ற பெயரில், பாதுகாப்பே இல்லாத இடத்திற்கு
இடம் பெயரச் செய்வது நியாயம் தானா?.
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை இடம் பெயரச் செய்து, ஆக்கிரமிப்பை
அகற்ற அக்கறை காட்டும் அ.தி.மு.க. அரசு, அதே ஆற்றங்கரையோரம் பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடங்களை
மீட்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை?. ஆற்றங்கரையோர மக்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்களாகவும், நடைபாதை
வியாபாரிகளாகவுமே உள்ளனர்.
எனவே சென்னை மாநகரத்திற்குள்ளேயே அவர்களுக்கு வசிப்பிடங்களை உருவாக்கி கொடுத்திட வேண்டும். அதை செய்யாமல் 30
கிலோ மீட்டருக்கு அப்பால் வீடுகளை ஒதுக்கித் தந்தால், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மீண்டும் ஏற்கனவே வசித்த அதே
இடங்களிலேயே வசிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply