சவுதியில் ஷியா இன தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: வகுப்புவாத மோதல்கள் தலைதூக்கும் என அமெரிக்கா கவலை
சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) உட்பட நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது. நிம்ர் அல் நிம்ருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதற்கு, ஷியா ஆதரவு ஈரான் அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு கடும் விலை கொடுக்க வேண்டி வரும் எனவும் ஈரான் கூறியிருந்தது. இந்நிலையில், ஈரான் தலைநகரான டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் முன்னால் இன்று அதிகாலை போராட்டம் நடத்தியவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், மத்திய கிழக்கு மற்றும் அராபிய தீபகற்பம் பகுதி மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாழும் ஷியா பிரிவினருக்கும், சன்னி பிரிவினருக்கும் இடையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படலாம். இதன்விளைவாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் அமைதி சீர்குலைந்து, பதற்றம் ஏற்படக்கூடும் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க சவுதி அரசு முன்வர வேண்டும். அதிருப்தியை அமைதியான முறையில் வெளிப்படுத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்தை தணிப்பதற்கு அங்குள்ள அனைத்து தலைவர்களும் இருமடங்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply