ஜல்லிக்கட்டை நிறுத்திய சோனியாகாந்தி மன்னிப்பு கேட்டால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்: பொன்.ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டை நிறுத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டால், பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். சம்ஸ்கார்பாரதி என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் வரை பாரத பண்பாட்டு கலாசார ஒருமைப்பாட்டு யாத்திரை தொடக்க விழா நேற்று கன்னியாகுமரியில் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அப்போது நிருபர்கள், அவரிடம், ஜல்லிக்கட்டை பொங்கலுக்குள் நடத்த வேண்டும். அப்படி நடத்தாவிட்டால் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி உள்ளாரே. உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.
அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்து கூறியதாவது:-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கையை ஏற்று கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டது.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழுக்க, முழுக்க காரணம். இது காங்கிரஸ் செய்த தவறு. எனவே காங்கிரஸ் செய்த தவறுக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கடந்த 1½ ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு நான் முயற்சியை எடுத்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வாதாடியும் வருகிறேன்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டதற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் பட்சத்தில், ஜல்லிக்கட்டு நடக்காமல் போனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply