6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி உறுதி

maithiriநாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு – கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டு போர் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் முகாம்களில் வாழும் 10 ஆயிரம் பேரிற்கு அடுத்த ஆறு மாதங்களிற்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது மிகவும் இலட்சியபூர்வமான இலக்கு, எனினும் உள்நாட்டில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களிற்கு வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்வது எனது கடமைகளில் ஒன்று, வடக்கு-கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களிற்கு மாத்திரமின்றி புத்தளத்தில் உள்ள மக்களிற்கும் இந்த வருட நடுப்பகுதிக்குள் காணிகள் வழங்கப்படும்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது 25 வருடங்களாக முகாம்களில் வசித்துவரும் 1300 குடும்பங்களை சந்தித்தேன், இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை, இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காணவிரும்புகின்றேன் நிலங்கள், மற்றும் இல்லாததே இந்த பிரச்சினைக்கான முக்கியமான காரணம்,இதற்கு அடுத்த ஆறுமாதங்களிற்குள் தீர்வை காணுவேன்.

மேலும் அடுத்த இரு வாரங்களில் வடக்கு-கிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படி இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் நிலத்தை பொதுமக்களிடம் வழங்குவதற்காக நான் யாழ்ப்பாணம் செல்லவுள்ளேன்.

போர்க்குற்ற விசாரணைகளிற்கான பொறிமுறை குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். நாடு மீண்டும் போருக்குள் தள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கான அழைப்பை விடுக்கவுள்ளோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply