தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பொங்கல் பானைகளின் விலை அதிகரிப்பு
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரிகளில் மண்கிடைக்காமல் போனதால், 3 கிலோ கொள்ளளவு கொண்ட பொங்கல் பானைகள் ரூ.650 வரை விற்கப்படுகின்றன.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மூலம் பண்டைய தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டு சிறப்புகளை இளைய சமுதாயத்தினரும், மாநகரங்களில் வாழும் மக்களுக்கும் அறிந்து கொள்வதற்காகவும், கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
சென்னையில் குக்கரில் பொங்கல் வைக்கும் அளவுக்கு மக்கள் மாறிஇருந்தாலும், கிராமங்களில் இன்றும் மண்பானையிலேயே பொங்கல் செய்து கொண்டாடுகின்றனர். இதற்காக, திருவேற்காடு, மாம்பாக்கம், பெரியபாளையம், ராமாபுரம், வேலப்பன்சாவடி பகுதிகளில், மண்பாண்டத்தொழிலில் சில குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.
இவர்கள் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல்பானை, மண்அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரித்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நுங்கம்பாக்கத்தில் பொங்கல் பானைகள் விற்பனை செய்யும் பரிமளா மற்றும் குணசுந்தரி ஆகியோர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக 6 அளவுகளிலான பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 3 கிலோ கொள்ளளவு கொண்ட பானைகள் ரூ.650, 2½ கிலோ அளவு கொண்ட பானைகள் ரூ.400, 2 கிலோ ரூ.350, 1 கிலோ ரூ.150, அரைகிலோ ரூ.100, கால்கிலோ ரூ.70 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர 6 பானைகள் மற்றும் 1 அடுப்பு கொண்ட 1 செட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மண்பாண்டங்களின் விலை சற்று அதிகரித்துவிட்டது. மண்பாண்ட பொருட்களின் மீது பொதுமக்களுக்கும் வரவேற்பும் சற்று குறைவாகவே தான் காணப்படுகிறது. இருந்தாலும் பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாது என்பதால் ஒரு சிலரே மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.
மண்பாண்டம் தயாரிக்கும் காளியம்மாள் கூறும் போது, “பொங்கலுக்காக மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட ஒரு டிராக்டர் களிமண் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஆகிறது. களிமண்ணை உலக்கையால் குத்தி மென்மையாக்கி, சலித்து, கரைத்து, போதிய மணல் சேர்த்து பானைகள் செய்து, 12 நாட்கள் வெயில்படாமல் நிழலில் உலர வைத்து, பின் 4 நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். இதில், சிறுதவறு ஏற்பட்டாலும் பானையில் வெடிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கடினமான இவ்வளவு உழைப்பிற்குப் பிறகு தயாராகும் மண்பானை, மண்அடுப்பு போன்ற மண்பாண்ட பொருட்களுக்கு அதிக மவுசு இல்லாததுடன், விலையும் அதிகரித்து இருப்பதால் பொங்கல்பானைகள் விற்பனையில் விறுவிறுப்பு இல்லை“ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply