பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது : பாலித்த கோஹன

“பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அரசாங்கத்தின் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கை தொடரும்” என்று வெளியுறவு செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் தற்போதைய நிலையில் மேற்கொண்டு வரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகளும் தொடரும். வன்னிப் பகுதியிலிருந்து பொது மக்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சி நிரல் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்படமாட்டாது.

அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குறை கூறப்படுகின்றது என்று கூற முடியாது. ஐக்கிய நாடுகள் சபையும் அண்மையில் அரசாங்கம் அகதி மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது. அகதி மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறைவு என்று எந்த அமைப்பும் இதுவரை கூறவில்லை.

கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வடக்கு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்து வருகின்றோம். இந்நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும். எம்மால் முடிந்தவரை சர்வதேசத்துக்கு நிலைமைகளை விளக்குவோம்.

சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. அண்மையில் அமெரிக்காவில் புலம் பெயர் தமிழர்கள் 2000 பேர் (அரச ஊழியர்கள்) விடுமுறையில் இருந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இங்கு வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் எமது பக்க செயற்பாடு குறைவானதாகும். இருந்தாலும் நாங்கள் வெற்றிபெற்றுவந்துள்ளோம்” என்றார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “வெளிவிவகார செயலாளரின் பேச்சை கேட்டுவிட்டு நாளையிலிருந்து அரச ஊழியர்கள் அனைவரும் விடுமுறையில் பிரசாரம் செய்ய வந்துவிடுவார்களோ தெரியவில்லை என்று கூறினார். அத்துடன் நாட்டை நேசிக்கின்ற அரச ஊழியர்கள் அதிகளவில் உள்ளனர் என்றும் அவர்களின் சேவைகளும் அரசாங்கத்துக்கு தேவையாகவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply