நாடாளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சமர்பிக்கப்பட்டவுள்ளது
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. முழுநாள் விவாதத்தின் பின்னர் இந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடுகின்றது.
இதன் போது முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை பிரதமர் சமர்ப்பிக்கவுள்ளார்.இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், உட்பட கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் உரையாற்ற இருப்பதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றிய பின்னர் சாதாரண சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தை வழமை போன்று கூட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு தேவையாயின் நாடாளுமன்றத்தை கூட்டாது அரசியலமைப்பை திருத்தும் பணிகளை மட்டும் அரசியலமைப்பு சபையினூடாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பை திருத்துவதற்காக மக்கள் கருத்தறியும் வகையில் 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் கருத்துக்களை நேரில் சென்று இந்தக் குழு எழுத்திலும், வாய்மொழி மூலமும் பெற இருப்பதாக மக்களின் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு மக்களின் கருத்துக்களை அரசியலமைப்பு சபைக்கு வழங்க இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்தறியும் குழு மக்களின் கருத்துக்களை எழுத்து மூலமும் வாய்மூலமும் பெறும் பணிகளை மார்ச் மாதத்தில் பூர்த்தி செய்து ஏப்ரல் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், 6 மாத காலத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் புதிய அரசியலமைப்பு பின்னர் மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது.
இதேவேளை புதிய அரசியலமைப்பினூடாக ஜனாதிபதியின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கவும் தேர்தல் முறையை மாற்றவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply