பொங்கல் திருநாள் ஜெயலலிதாவின் வாழ்த்துத் செய்தி
முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவதுஉலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” எனத் தொடங்கும் குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்று உழவுத் தொழிலின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுகிறார்.
இத்தகைய சிறப்புக்குரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும், உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் “முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்”, நெல் சாகுபடி உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் பரப்பினை அதிகரித்தல், பயறு வகைகள் சாகுபடியை பெருக்குதல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி மேற்கொள்ளுதல், சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்க மானியம் வழங்குதல், விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் அமைத்தல், வேளாண் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் அளித்தல், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் என பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாகத் தான் உணவு தானிய உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனையை தமிழகம் படைத்து வருகிறது.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என்று மனதார வாழ்த்தி, பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply