விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார் நேதாஜி: பிரிட்டன் இணையதளம் இன்று புதிய ஆவணம் வெளியீடு
தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தால்தான் நேதாஜி உயிரிழந்ததாக பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில் தெரிவித்துள்ளது.சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ‘www.bosefiles.info’ என்ற இணையதளம் நேதாஜியின் மரணம் குறித்த பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. அதில் தைவான் விமான விபத்து குறித்து பல்வேறு பகுதிகளாக ஆவணங்களாக வெளியாகி வருகிறது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.
அந்த ஆவணத்தில் உள்ளதாவது, “கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.
கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள்(17-08-1945) நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டது.
அதனை தொடர்ந்து, தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியானது.
அதில், “1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜனவரி 16-ம் தேதி(இன்று) நேதாஜியின் விமான விபத்தை தொடர்ந்து 18-8-1945 அன்று இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் அந்த இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில், இன்று 3-வது ஆவணம் வெளியாகியுள்ளது. அதில், விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு நேதாஜி மரணம் அடைந்தது குறித்து 5 சாட்சிகளிடமும் மாறுபட்ட கருத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply